Thursday, 21 April 2016

கள்ளுண்ட மயக்கத்திலா என்னைப் பிரித்தாய்

இல்லாத இருள் இருந்து  
   ஒளியுலகில் வீழ்ந்து விட்டேன்
பொல்லாத பிறவியிது    
   போய்வொழிவது எக்காலம்!!

அன்னை என்பர் ; தந்தை என்பர் 
   மாமன் என்பர்  மாமி என்பர்
இன்ன இன்ன சொல்லறியா  
   வந்துதித்த சொந்த பந்தம்
உள்ளுக்குள் வெந்தொழிந்து  
   வெளியுலகில் (முகத்) திரையுமிட்டு
தெள்ளு தனி சிரிப்பதனை  
   தவறாமல் இறைத்துவிட்டு
நடிக்கின்றோம் பாரினிலே
   திரை மறைக்கும் வேளைவரை
மடிக்கின்ற திரையுமங்கு
   நீட்டிவிட்டால் உறவுமெங்கே!!!

நகமென்றும் சதையென்றும்
   கண்னென்றும் விழியென்றும்
யுகயுகமாய் நிலைக்குமென்று
   உவந்திட்ட பந்தமெல்லாம்
சில நிமிட மந்திரத்தில்
   பூஜ் ஜி யமாய் போகுமென்றால்
வலைபின்னி முச்சணைக்கும்
   உறவுகளே மறைந்திடுங்கள்

வந்துவிட்டேன் இப்புவியில்
   வாழ்ந்துவிட்டேன் புதைமணலில்
வெந்து உடல் வேகுமுன்னே
   ஒன்று மட்டும் உரைத்துவிடு

உள்கடந்த ஞானியனே
   உன்னில் நான்
       கரைவதுவே
வெளிவிழுந்த பிறவிப்பயன்
   என்றுரைப்பர்
      மதிமிகுந்தோர்

உள்ளும் புரியவில்லை
   புறமும் தொரியவில்லை
உன்னுள் மறைவதுதான்
   உண்மை முக்தியென்றால்
கள்ளுண்ட மயக்கத்திலா
   என்னைப் பிரித்தாய்
        உன்னிலிருந்து




No comments:

Post a Comment