Monday, 15 January 2018

கலங்காதே கோவிந்தா காத்திடுவேன் கண்மணியே

வஞ்சக மனிதர்களின்
நாடழிக்கும் நாத்திறனும்
ஈரமில்லா நெஞ்சினரின்
உறவறுக்கும் செயல்திறனும்

நெஞ்சகத்து கடிந்திறங்கி
ஊன்குலைத்து உயிர்துடிக்க
அஞ்சுகின்றேன் நீலவர்ணா
மான்போலே மருளுகின்றேன்

மாய்வதற்காய் அஞ்சவில்லை
கொஞ்சுமொழி  கோமகனே
எனக்கென்று எதுவுமில்லை
தந்துவிட்டேன் உன்தனக்கே

நெஞ்சகத்து நீயிருக்க
நொந்திடுமோ நின்மனமே
வேய்ங்குழலின் ஓசையினை
மறைத்திடுமோ நீசனுரை

சின்ன குழைந்தையவன்
காண்பவர்க்கு பாலனவன்
கலங்காதே கோவிந்தா
காத்திடுவேன் கண்மணியே

கீழ்மக்கள் காண்கிலாது
தீமொழிகள் கேட்டிலாது
மனக்கோட்டை தனில்வைத்து
காத்துநிற்பேன் யுகயுகமாய் !!

எனைக்காக்கும் கண்ணனவன்
நான் காக்க வேண்டுகிறான்
இப்பிறவி பெற்றபயன்
இதுவன்றி வேறென்ன


- தனஞ்சயன்