Sunday, 8 December 2024

....உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர்.....

 ....உள்ளொன்று வைத்து 

    புறமொன்று பேசுவோர்.....

              ------இராமலிங்க சுவாமிகள்

---------------------------------------------------------


உளத்தில் உளதெல்லாம் 

உதட்டில் வருவதென்று 

உருவில்லா உருவினிடம் 

உள்ளுருகி  வேண்டினன் நான்..


"உள்ளொன்று வைத்து 

புறமொன்று பேசுவோர்"

உறவுமினி வேண்டாம் 

அருளென்று நாடினேன்..


அண்டம் கதிகலங்க 

பேயன் சிரித்து நின்றான் 

வேறு மார்க்கமில்லை 

போகாத ஊருக்கு 

வழிதான் உண்டுமோ?? 


உண்மையும் நேர்மையும் 

செத்தொழிந்து நாளாச்சே   

ஊமையாய் செவிடாய் 

போ என்று வரம் கொடுத்தான். 


            ------  தனஞ்சயன்   

Monday, 25 November 2024

சிலப்பதிகாரத்தால் பிறந்த புலம்பதிகாரம்

 

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்

கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்         

படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது

நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே

நாராயணா வென்னா நாவென்ன நாவே.

                                                         -- சிலப்பதிகாரம்

 

          

பிறந்தது சிறையில்:

இரவு கழிந்தது மழையில்:

வளர்ந்தது மறைவில்:

வாழ்ந்தது இடையில்:

 

பட்டது கம்சனிடம்

வகை வகையாய்..

சிறுமேகத் துன்பம் போய்

பெருமேகம் சூழ்ந்துவிடும்  

 

விட்டது பூதமென்றால்

வந்தது சடகம்

காகம் போன பின்பு

ஆகம் வந்ததென்ன...

 

புயலில் பஞ்சினைப் போல்

மேகம் கலைந்து நிற்க

அறியாப்பிள்ளையென

தெரியா நின்றதென்ன!!!

 

நண்பருக்காய் தூது போனாய்

தருமத்தின் மறுவடிவாய்……

துரியனெனும் மடமதியோன்

வாயிலுக்கு அடிமைபோன்றே!

 

அன்பருக்கு இன்பமாக, தருமத்தை காத்து நிற்க, 

தனை மறைத்து, வில்லாளன் முன்னிறுத்தி

பகை முடித்து, வேடுவன் அம்பால் தனை முடித்த, 

கார்முகில் மேனியனே, நகை தவழும் இதழினனே 

 

கூடு விட்டு பாய்ந்துசெலும் வேளையிலே

           வேண்டுவனோ!!  யானறியேன் !    

தூதர் எமை சூழ்ந்திருக்க

           நாவெழுமோ நானறியேன்!

நரைமுடிந்து கூன் விழுந்து

           கண் மறைத்து மதிமயங்க

கரைகாணாப் பெருவழியே...

           நினைத்திடவும் மதியுண்டோ ?

                 யானறியேன்!

 

இன்றே சொல்லிவிட்டேன்

நன்றே சொல்லிவிட்டேன்

 

கண்ணா, கோவிந்தா, நாராயணா, கேசவா, மாதவா ….   

நாவினிக்க சொல்லிவிட்டேன்...மறுபிறவி மாய்த்தொழிப்பாய்.    

Friday, 11 October 2024

The last Tree

 அது ஒரு விதையின் முழு பரிமாணம் 

புவிப்பிளந்து நெடிதுயரும் கனிதருவாம். 


வேருக்கு நீரூற்ற யாருமில்லை: 

உரம் வைத்து உடல் வளர்க்கும் பேறுமில்லை:


வான் வளத்தால் பூமாதின் பால் குடித்து, 

பானுதரு கிரணங்கள் இலையால் தாங்கி,


எவர் தயவும் இல்லாமல் நான் வளர்ந்தேன்: 

காயாகி கனியாகி தளிர்த்து நின்றேன்:   


காயானால் கல்லடிகள் மேனியெங்கும்... 

தளிரானால் கூரரிவாள் கீறிவைக்கும்: 


விளம்பரங்கள் உடல் துளைத்து மேனியெங்கும் 

ஊசிமுனை வதைகளுக்கோ உடலெடுத்தேன்


பட்டைகளை கழற்றிவிட்டால் பட்டமரம் 

பட்டறையில் உருமாறும் விதவிதமாய்     


மிச்சமும் விடவில்லை எச்சமும் விடவில்லை 

வனமெல்லாம் கட்டிட சுடு காடு ஆச்சே..    


நான் இருந்தேன் நான் மறைந்தேன் பாவமில்லை 

இனி நீ இருக்க இடம் உண்டோ இப்புவியில் ?  

உயிர் ஜனிக்க ஏதுமினி மிச்சமுண்டோ ?

உயிரை சமைத்து உண்டபின், மனிதம் எது?  

Friday, 30 August 2024

 एको देवः सर्वभूतेषु गूढः सर्वव्यापी सर्वभूतांतरात्मा |

कर्माध्यक्षः सर्वभूताधिवासः साक्षी घेता केवलो निर्गुणश्च ||
- Swetasvatara Upanishad 6-1
"இறைவன் எல்லா உயிர்களிலும், எங்கும் நிறைந்து, எல்லா உயிர்களுக்குள்ளும் மறைந்திருக்கிறார். அவனே எல்லா செயலுக்கும் தலைவனாய் இருந்து சாட்சியாயும் இருக்கிறான். அவன் அதீதமானவன், அதாவது எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவன், எதற்கும் கட்டுப்படாதவன்"
எல்லாவற்றிலும் இறைவன் என்றால் நாம் ஏன் எவரோடும் சண்டையிட வேண்டும்.
ஒரு அழகான கதை உள்ளது. ஒருவனுக்கு தீடிரென்று தான் ஒரு எலி என்று தோன்றியது. இந்த எண்ணம் ஆழ் மனதில் பதிந்து, அதை முழுவதுமாக நம்பி, பூனையை பார்க்கும்போதெல்லாம் பதுங்கி ஒதுங்கி கொள்வான்.
அவனை ஒரு மருத்துவரிடம் கூட்டி சென்று, வேண்டிய மருத்துவம் பார்த்து, அவன் தான் எலி அல்ல மனிதன் என்பதை உணர்ந்து கொண்டான்.
ஆனால் அவனுக்கு புதிய ஒரு சந்தேகம். நான் எலி அல்ல என எனக்கு புரிந்துவிட்டது, ஆனால் அது பூனைக்கு தெரியுமா??, அது என்னை எலியென துரத்தினால்???, என புதிய கவலை வந்தது .....
இது எல்லா நல்லவர்க்கும் வருகின்ற ஒரு கவலை.
எப்படி அனைவரையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பது.??
அவருக்கு புரிகின்ற மொழியில் பேசணுமா அல்லது, எனது ஆத்ம ஞானத்தை புரிந்து அனைவரையும் ஒரேபோல் அணுகவேண்டுமா??.
அனைத்தையும் இறைவனாய் பார்த்தால் உலகில் எதனோடும் எனக்கு பகையே இருக்காது. ஆனால்.... "நான்" இருப்பேனா??.
பகை அழிக்கத்தானே பகவான் கீதை உரைத்தான்.....
இது தெளிவா ??? குழப்பமா ??? இது தெளிவான குழப்பம்.
Be mercilessly critical about bad people’s thoughts and actions, but love them unconditionally because they also constitute the Supreme Brahmam.
அனைவரையும் எந்த கட்டுப்பாடும் இல்லாத அன்போடு நோக்குங்கள்.
ஆனால் அவர்களின் செயலில் உள்ள, சிந்தனையில் உள்ள, தீய செயல்களை, தீய எண்ணங்களை மூர்க்கமாக எதிர்த்து துரத்துங்கள்.
Like
Comment
Send
Share

 பிறந்தது ஏனோ, யானறியேன்..

இருப்பதும் ஏனோ, யானறியேன்..
மறைவதும் என்றோ,யானறியேன்...
பிறந்ததும், இருப்பதும், மறைவதும் உன்செயல்
இதில் என்பிழை ஏது, யானறியேன்..
வந்தேன், இருந்தேன், மறைவேன் எனில்,
மாயனே உன்னுடன் கூடுவனோ ??
சாம்பலும் கடலினில் கரைவது போல்,
உன்னிலுள் என்னையும் கொள்குவையோ??
பிறவியில் வாழ்வதை தருகுவையோ??
- தனஞ்சயன்
All reactions:
Sakthisree Jayasankarji, Karthik Rajapaul and 26 others

Tuesday, 28 May 2024

கேட்டதும் கிடைத்ததும்

 

இலவில் காய்த்திருந்த பஞ்சு
காத்திருந்தது,
விண்ணில் பறக்க ....
மழை வரும் வரை...

மீண்டும் வெள்ளம் வரும்:
களி மண்ணில்
புதைந்த மீன்..
வந்தது கொக்கு...

குஞ்சுகள் பார்த்திருந்தது
தாயின் வருகை
கழுகு வந்ததால்
சித்தியானது ....

வேண்டி மனம் நாடியது
பேரானந்தம்
இக சுகம் கூடியதில்
கூடாததே ஆனந்தம் !!

Saturday, 6 April 2024

விளையாட்டு பதுமையென்றா

 சுடுகின்ற நீருமே, மேனிதான் தாங்குமோ, 

    பதம் பார்த்து பேணினேனே

(தரை )

படுகின்ற பாதமும், நோகுமோ, சாகுமோ,

    அணி கொண்டு ஓம்பினேனே

காய்கின்ற சூரியன், கதிரதும் துளைக்குமே

    தணலிலே, குடையிலே, ஒதுங்கினேனே             

கருவிலே தோன்றிய நாள்முதல் ஒருகுறை 

    அறியொணா தாங்கினாரே  


மேனிக்கு நறுமணம், ஒப்பனை பூச்சுகள் 

    நிதம் ஒரு மாற்றம் உண்டே    

அறுசுவை உணவுதான், கசந்திட தோன்றுதாம்

    தினம் தினம் விருந்துதானே

பறப்பதும் பாய்வதும்  நித்திய வாழ்வதாய்     

   உலகெலாம் கண்ட   துண்டே 

எத்தனை எத்தனை இன்பங்கள் வைத்தனை

  உலகிலே மாதவனே.


பேழையில் வைத்து பூட்டிய செல்வம் 

   பூமியின் இருளுக்குள் மறைவதற்கோ 

பேணிய மேனியும் புழுக்களால் துளைத்திட 

  சல்லடை பூக்களாய் மாறுதற்கோ

குளிரதும் வெம்மையும் அகற்றிய மேனியும் 

  நெருப்பிலே எரிதழல் பொசுக்குதற்கோ

கோலமும் அழிந்து இருந்ததும் மறந்து 

  நீறதாய் கரைவதற்கோ 


ஈட்டிய செல்வமும், நாட்டிய புகழும்தான்

  கடைசியில் நிலைப்பதுண்டோ

காலங்கள் மாறிடின் மறைந்தவர் நினைவுகள் 

  எத்தனை காலம்தான் நினைந்திடுமோ 

எதுவும் சதமல்ல, வாழ்க்கை பயனல்ல 

   என்றுதான் கூறி நின்றால்

எதற்காய்  எனை படைத்தாய், ஈச, நின் 

  விளையாட்டு பதுமையென்றா ??? 

Monday, 1 April 2024

தனிமை - 2

 தனிமை


பிறக்கும் முன் கருவறையில் 

      கும்மிருட்டுத்  தனிமை! 

பிறந்தவுடன் கண் மூடி 

     நல்லுறக்கத் தனிமை! 

கூடிக்  களித்தாலும்   

    மகுடம் ஏற தனிமை!

தோற்று துவண்டு விட்டால் 

   நண்பரில்லை தனிமை...........  


மணநாள் கண்டாலும் 

    மன அறையில் தனிமை! 

உறவுகள் தொடர்ந்தாலும் 

    உள் மனதில் தனிமை!   

ஊர் புகழ வாழ்ந்தாலும் 

   புகழ் மலையில் தனிமை! 

பிறர் இகழ வாழ்ந்தாலோ 

   புற உலகில் தனிமை........ 


செல்வம் கொழித்தாலோ

   உற்றார் முன் தனிமை! 

வறுமை எனை வாட்ட 

   உலகிருந்தும் தனிமை! 

தனிமை தனிமை அது 

   வாழ்வில் ஒரு அங்கம் ..

எவ்வுயிர்க்கும் கூடவரும் 

  நிழலுருவாய் தனிமை. 


தனியாக பிறந்திருந்து 

   தனியாக வாழ்ந்து 

தனியாக நடையிழந்து 

   ஊரெங்கும் தேடி 

துணையாக ஒரு மனதை 

   காணாது வாடி 

தனியாக போகின்றேன் 

  பிணவறையை நாடி....


பிணமாக மாற 

  அட.... 

    'என்'னோடு உறவுகொண்ட

       உடம்பதுவும் இல்லை....      


உடம்பை விட்டு மீண்டும் 

   தனியாக போகின்றேன் 

      தனியான நெடும்பயணம்.... 


'நானு'ம் தனிமை 

   என் ஊனோ பாவம்.. 

      அசைவில்லா 

        கொடும் தனிமை!!!.   

Thursday, 8 February 2024

தந்தைமொழி.

 ஆண்டுகள் பல கடந்தும்

மாறாத நினைவலைகள்..

பாசத்தை உரையினிலே கேட்டதில்லை எந்நாளும்
கண்ணெதிரே உறவினிடம் புகழ்ந்ததில்லை என் பெருமை
அன்பாக அணைத்ததுவோ நினைவாக எதுவுமில்லை..

என்றோ ஒருநாள் வெளி உணவு விருந்தோம்பல்
இன்று போல் outing இல்லை
வானினிலே பறந்ததில்லை,
தவம் கிடந்தால் மகிழுந்து வரம் கிடைக்கும்
ஆடம்பரம் எதுவுமில்லை, வீண் செலவும் செய்ததில்லை
நினைத்ததெல்லாம் கிடைத்ததில்லை

ஆனால்

என் முகம் வாட, நொடிப்பொழுதில்
அவர் முகமொடு உடல் பதைக்க
முன்கோப முகத்திற்குள் மறைந்திருக்கும்
பாசமழை மௌனமாய் மடைதிறக்கும்
சனகாதி முனிவரவர் அனுபவித்த ஆன்ம சுகம்
அடையாளம் காட்டாமல் உள் நிறைக்கும்

காலங்கள் கரைந்தாலும்
மறைவதில்லை மௌனமொழி
ஊனோடு உயிர் பிரியும் வேளைவரை
மறப்பதில்லை தந்தைமொழி.