Sunday, 21 August 2022

மாற்றம் "ஏ"மாற்றம்

 அன்று 


காத்திருந்து காத்திருந்து 

என்றோ ஒருநாள் 

சித்ரா ஹோட்டலில் சாப்பிட்ட  

மசால் தோசை 

நாவினின்று மாற மறுத்தது. 


இன்று, 


தினம் தினம் 

சொல்லுமுன் ஓடி வரும் 

ஸ்விக்கியும் சோமடோவும்   

மணக்கிறது ...

ஆனால் ஏனோ 

நாவினில் ஏற மறுக்கிது.


அன்று 


தீப்பெட்டியில் செங்கல் செய்து

அழகழகாய் வீடு கட்டி 

அட்டையிலே துளையெடுத்து 

சுவரினிலே சினிமா காட்டி

வீட்டு படிக்கட்டில் அமர்ந்து  

ஓட விட்ட  பேருந்து

அழகாய் பயணித்தது... 


இன்று 


?????   


அன்று 


என்றோ ஒருநாள் 

இரவிலே

வருகின்ற பந்தத்தை வரவேற்று  

நிப்பாரம்  பார்த்து 

துள்ளி துள்ளி 

வைக்கோல் மெத்தையில் 

பயணித்த புரவி வண்டி 

இரவெல்லாம் சுகித்தது.


இன்று 


அலுங்காமல் குலுங்காமல் 

ஆறு கால் பாய்ச்சல் வண்டி 

குலுங்கவில்லை 

சுகமுமில்லை 


அன்று 


பள்ளி முதலிலே 

பழைய காகிதம் சேர்த்தெடுத்து

கோணி ஊசியால் கோர்த்துவிட்டு  

மார்பிள் பேப்பரும்

காலிகோ துணியுடன் பிணைத்துவிட்டு 

அச்சகம் சென்றதை சீராய் அறுத்து 

புதிய நோட்டென்று   

கொன்டுசென்ற, பழையது 

உவட்டாமல் இனித்தது 


இன்று 


காகித நோட்டும் மணக்கவில்லை

கணனி நோட்டும் இனிக்கவில்லை..


காரணம் ஒன்றுமில்லை        

நீளுகின்ற வயது 

உதிக்கின்ற காலையை

புதிதாய் 

பார்க்க 

மறுக்கிறதோ???