Wednesday, 27 September 2023

நிம்மதி அது எங்கே

 .... நிம்மதி அது எங்கே???.....

கோபுரத்தில் கூடுகட்டி
விண்ணுயர சிறகடித்து
பார்முழுதும் சுற்றிவரும்
படைத்தவர்க்கும் கிட்டவில்லை
ஆயிரம் அணிதொடர
ஊர்வலமாய் செல்பவர்க்கும்
நாவலற்கும், பாவலற்கும்
நிச்சயமாய் கிட்டவில்லை
திறமையினால் கோலோச்சி
பட்டங்களும் பதவிகளும்
தேடிவந்து குவிந்தவர்க்கும்
எந்நாளும் கிட்டவில்லை
பந்தங்களும் பாசங்களும்
தேடி வந்து கூடி நின்று
சொந்தக்கதை பேசிநின்று
உள்சிரித்து, வெளிஅழுது....
கடைக்கால் வழியனுப்பும்
இனிதான தருணம்வரை
விடைகாணா கேள்வியிது
நிம்மதியில் உலகமிது!!
தேடிநிதம் அலுத்து
உறங்கா விழி மூடி
மீளா துயில் பெறவே
தேடும் அது கிடைக்கும் (?)
கிடையா பொருள் நோக்கி
விழிகள் திறந்துவைத்து
கிடைக்கும் என நினைத்து
விழிகள் மூடுகிறோம்!!!

மலை மலையாய் எண்ணக் குவியல்கள்

 மலை மலையாய்

மலை மலையாய்

எண்ணக் குவியல்கள்
எண்ணா குவியல்கள்:
நேற்றைய நினைவை
இன்று தேடுமுன்
நாளை வந்து விடுகிறது !
மலை மலையாய்
மலை மலையாய்
எண்ணக் குவியல்கள்
எண்ணா குவியல்கள்:
அதில் எதை சேர்க்க, எதை விடுக்க
இருக்கட்டும்: என்றோ உதவலாம்.
அலமாரியில் அடைத்து வைத்த பழந்துணிபோல்
மலை மலையாய் எண்ணக் குவியல்கள்.
நல்லவற்றை தேடுங்கால்
தீயவைகளை முளைத்து வரும்
அவை வேண்டாம் என ஓட
எவை எவையோ மறைந்து விடும் :
இறைவன் மிக பெரியவன்
மலைமுகடு தெரிவது போல்
மலை முழுதும் தெரிவதில்லை.
மலை முழுதும் தெரிந்து விட்டால்
வாழ்க்கையில் ஓர் அமைதி இல்லை
மலை மலையாய், இருந்தும்
மறதியெனும் அருமருந்தால்
உயிர் பிடித்து வாழ்கின்றேன்
இறைவன் மிகப்பெரியவன் !!!
----தனஞ்சயன்