Friday, 29 April 2022

அழுகுணிசித்தர்

 

காட்டானை மேலேறி கடைத்தெருவே போகையிலே

நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ

நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலுங்

காட்டானை மேலேறி என் கண்ணம்மா

கண்குளிரக் காண்பேனோ  

                                              -------  அழுகுணிசித்தர்

 

காட்டானை, …  உண்மை உலகை காட்டானை,  ….. என்னையே எனக்கு காட்டானை, மாயனை, தேவனை, காட்டானை, …. காட்டானை போல் வெறிகொண்டு பொய்மானை தேடுகின்ற,  ஊனக்  கண்களுக்கு, மேல் ஏறி , …. புருவங்கள் கோர்கின்ற சூட்சுமத்தில் நிலை நிறுத்தி, கடைசியிலே சென்றடையும் பரமனவன் நிலை நோக்கி,… ஒரு மனதாய் உருக வென்றால் ...!!!!

 

நாட்டினிலே, வீட்டினிலே, சுகத்தினிலே, இகத்தினிலே, நாட்டமே கொண்டுழலும் என் மனக்குதிரை நகைக்கிறது, ஏளனமாய் கனைக்கிறது..

 

என் கண்ணம்மா,…..  மனக்குதிரை நகைத்தாலும், இகத்திற்கு இழுத்தாலும், பார்வையினை உள்நிறுத்தி, பரத்திற்கு வழிதேடி, இறைநிலையில் குளிர்ந்திடுவேன்….. ஞானமும் நான் கடந்திடுவேன்   

                                        -------புரியும் தமிழில் புரிந்தவரை தனஞ்சயன்

Tuesday, 26 April 2022

Appar

 

தருமசேனரான சமணத்தில் மாறிய மருள்நீக்கியாருக்கு தீராத வயிற்று வலி.

சமண மதம் கைகொடுக்கவில்லை.

ஓடி வந்தார் தமக்கை திலகவாதியாரிடம்..

தமக்கையின் அறிவுரைப்படி, அங்கு எழுந்தருளியிருந்த பிறைசூடனை எண்ணி,      

 

“கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்

ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.”

 

(திருவதிகை திருப்பதி தலைவனே! என்ன பிழை நான் செய்தேன் புரியவில்லை, பெருநோயாய் சூலை என்னை வாட்டுகிறது. காத்தருள்வாய் ..  உன்திருவடிகள் விடாது பற்றி துதிப்பேன்.. )

 

என்று துவங்கி, பதிகம் பாடி, நோய் நீங்கி, திருநாவுக்கரசராக பயணம் தொடர்ந்தார் ...

 

வலி சிலநேரங்களில் நல்லது ....

 

--- சித்திரை சதயம் ஸ்ரீ திருநாவுக்கரசர் (அப்பர்) குருபூஜை நாள்  .

Sunday, 10 April 2022

தச்சன் செய்த சிறுமா வையம்

தச்சன் செய்த சிறுமா வையம்

ஊர்ந்தின் புறாஅர் ஆயினுங் கையின்

ஈர்த்தின் புறூஉம் இளையோர் போல

உற்றின் புறேஎம் ஆயினும் நற்றேர்ப்

பொய்கை யூரன் கேண்மை

செய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே.

--- தும்பிசேர்கீரன் , குறுந்தொகை.

தச்சனாற் செய்யப்பட்ட சிறிய குதிரை பூட்டப்பட்ட சிறிய தேரில், ஏறிச் செலுத்தி இன்பமடையாவிட்டாலும், கையால் இழுத்து இன்பமடையும் சிறுவரைப்போல, தலைவனோடு கூடி இன்பமடையாவிட்டாலும், நல்ல தேர்களையும், பொய்கையையுமுடைய மருதநிலத் தலைவனது நட்பினால் இன்பமடைந்தோம். அதனால். தலைவியின் வளையல்கள் கழலாமல் உள்ளன.

இது பொதுவாக சொல்கின்ற பொருள் .

இந்த விளக்கங்கள் சங்க நூல்கள் வெறும் காமத்தை முன்னிறுத்தியே எழுதப்பட்டது போல் விளக்குகின்றன.

சற்று மாற்றி பொருள் கொள்வோமா! …………..

கண்டலன் நான் உனை வெறும் கண்ணினால்,
கொண்டலன் நான் உனை இரு கரத்தினால்,
தேரினில் வலம் வரும் மாயனே,
தேரினுள் நான் இலன், உண்மையே !
தச்சன் தேரினை இழுத்திடும் சிறுவர் போல்
மாயாதேரினில் நான் உளேன் மனத்துளே
நீ, கூடியே இருப்பதால் துயருறேன்
தேய்வதில் என் இரு கரங்களே!
மாயனே யார் உனைக் கண்டவர் ?
அகத்தினுள் கண்டதால் வேண்டிலேன்:
வேண்டிலேன் என்றுமே, உண்மையே,
என் புறக்கண்ணில் உன்னுரு தோன்றவே !
- தனஞ்சயன்.