Sunday, 31 December 2023

ஒரு குழந்தை பிறக்கிறது.

ஒரு குழந்தை பிறக்கிறது.


அனைவருக்கும் மகிழ்ச்சி.
மருத்துவர்களும், செவிலியர்களும் பரபரப்பாய் குழந்தைக்கு பணிவிடைகள் செய்ய...

குழந்தையின் முதல் முக தரிசனத்திற்காய், அத்தையும், மாமியும், சித்தியும் பெரியம்மாவும், மாமா, சித்தப்பா, பெரியப்பா என ஒரு படையே காத்து நிற்க....

தாத்தாவும் பாட்டியும், குழந்தையை காணும் ஆவலோடு, மகளின் நிலையென்ன என்ற தவிப்போடும் தேடி நிற்க ...

சுற்றமும் நட்பும் முதல் பரிசு எனது என்று ஏங்கி நிற்க ...

ஒரு சிறு திருவிழா அரங்கேறும் நேரம்...

ஒரு குழந்தை பிறக்கிறது.

***********************

கதிரவனின் கிரணங்கள் கீழ்த்திசையில் எட்டிப் பார்க்க..
மெல்லிய பூங்காற்று மேனியை இதமாக வருட..
புள்ளினங்கள் கீச்சென்று இசை பரப்ப ......
மொட்டுகள் மெல்லிய ஓசையோடு இதழ் விரிக்க...

எங்கும் இனிமையும், குளுமையும், சுகந்தமும் தவழ்ந்துவர.......

"புள்ளும் சிலம்பின காண்.....................
கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ"

என்று உலகம் துயிலெழும், "ப்ரஹ்மமுஹுர்த்தம்"
ஓரு நாளின் இனிய பிறப்புரைக்கும் நேரம்..

**************************

ஒரு குழந்தை பிறக்கிறது....
இனிமை தவழ்கின்ற ஒரு பொழுதில்..

பிறப்பு இனிமையானது
பிறப்பு செயல் நிறைந்தது
பிறப்பு பேரானந்தம் கொடுப்பது...

ஒரு நாளின், ஒரு ஆண்டின் பிறப்பும், அங்ஙனமே..
இனிமையான, செயல்கள் துவங்குகின்ற,
உலகு விழிக்கின்ற அதிகாலை நேரமேயன்றி ....

"The Dead of Night" அல்ல .

- Dhananjayan

Wednesday, 27 September 2023

நிம்மதி அது எங்கே

 .... நிம்மதி அது எங்கே???.....

கோபுரத்தில் கூடுகட்டி
விண்ணுயர சிறகடித்து
பார்முழுதும் சுற்றிவரும்
படைத்தவர்க்கும் கிட்டவில்லை
ஆயிரம் அணிதொடர
ஊர்வலமாய் செல்பவர்க்கும்
நாவலற்கும், பாவலற்கும்
நிச்சயமாய் கிட்டவில்லை
திறமையினால் கோலோச்சி
பட்டங்களும் பதவிகளும்
தேடிவந்து குவிந்தவர்க்கும்
எந்நாளும் கிட்டவில்லை
பந்தங்களும் பாசங்களும்
தேடி வந்து கூடி நின்று
சொந்தக்கதை பேசிநின்று
உள்சிரித்து, வெளிஅழுது....
கடைக்கால் வழியனுப்பும்
இனிதான தருணம்வரை
விடைகாணா கேள்வியிது
நிம்மதியில் உலகமிது!!
தேடிநிதம் அலுத்து
உறங்கா விழி மூடி
மீளா துயில் பெறவே
தேடும் அது கிடைக்கும் (?)
கிடையா பொருள் நோக்கி
விழிகள் திறந்துவைத்து
கிடைக்கும் என நினைத்து
விழிகள் மூடுகிறோம்!!!

மலை மலையாய் எண்ணக் குவியல்கள்

 மலை மலையாய்

மலை மலையாய்

எண்ணக் குவியல்கள்
எண்ணா குவியல்கள்:
நேற்றைய நினைவை
இன்று தேடுமுன்
நாளை வந்து விடுகிறது !
மலை மலையாய்
மலை மலையாய்
எண்ணக் குவியல்கள்
எண்ணா குவியல்கள்:
அதில் எதை சேர்க்க, எதை விடுக்க
இருக்கட்டும்: என்றோ உதவலாம்.
அலமாரியில் அடைத்து வைத்த பழந்துணிபோல்
மலை மலையாய் எண்ணக் குவியல்கள்.
நல்லவற்றை தேடுங்கால்
தீயவைகளை முளைத்து வரும்
அவை வேண்டாம் என ஓட
எவை எவையோ மறைந்து விடும் :
இறைவன் மிக பெரியவன்
மலைமுகடு தெரிவது போல்
மலை முழுதும் தெரிவதில்லை.
மலை முழுதும் தெரிந்து விட்டால்
வாழ்க்கையில் ஓர் அமைதி இல்லை
மலை மலையாய், இருந்தும்
மறதியெனும் அருமருந்தால்
உயிர் பிடித்து வாழ்கின்றேன்
இறைவன் மிகப்பெரியவன் !!!
----தனஞ்சயன்

Tuesday, 29 August 2023

ஏன் வந்தாய் நீ

 ஏன் வந்தாய் நீ .... என் பாவம் தொலைத்திடவா ... அல்லது உன் பாவம் கழித்திடவா 


அது என்றும் போல் ஒரு ரம்மியமான காலைப்பொழுது. கல்லூரியின் வாசலில் நுழைகின்ற நேரம்...
மேலாளர் அருகில் வந்தார்.
தரையை சுட்டிக் காட்டினார்.
ஒரு மொட்டு முழுதாக மலரும் முன், கிளையிலிருந்து பிரிந்து, கண்களில் மிரட்சியோடு, சிலை போல அமர்ந்திருந்தது....
தாயை பிரிந்த ஏக்கமா?... அல்லது தன்னை தாய் புறம் தள்ளிவிட்டாளே என்ற சோகமா.?.. தெரியவில்லை...
அடைக்கலம் தேடி எப்படி தனியாக வந்தது.??.
அந்த சின்னச்சிறு குருவி எந்த எதிர்ப்பும் இன்றி கைகளில் வந்தது..
அது எந்த இனம்!!! ... மனிதர்களைப் போல் ஏன் இனம் பிரிக்க வேண்டும்.. தெரியாமல் இருந்துவிட்டுதான் போகட்டுமே..
என் வீட்டிற்கு அதிதியாய் நுழைந்தது..
புதிய வீட்டில் புதுப்பெண் போல் மருட்சியோடு நுழைந்தது .
சிறிது நேரத்தில் இறுக்கம் களைந்து கொஞ்சம் தண்ணீர் பில்லரில் கொடுக்க , அருந்தியது....
இறகுகளுள் முகம் புதைத்து நிம்மதியாய் தூங்கியது...
அப்படியே தூங்கியது .... எழும்பவில்லை . ....



Tuesday, 25 July 2023

அகம் ப்ரஹ்மம்

 அகம் ப்ரஹ்மம் என்றார் :

நீயே அதுவென்றார் :
நானே அதுவென்றால்???

அதனினின் என்னை
எடுத்தபின் அது என்ன...
அது அதுவா, இல்லை குறைவா?

அதில் நான் சேர்ந்தபின்
அது அதுவா
இல்லை அது மிகுமா??

மிகுதலும் இல்லை !
குறைதலும் இல்லை !
அது புதிரா??

விடை காணா
புதிரிலே நானும்
அவிழாத ஒரு முடிச்சா??

ஆதிக்கே ஆதி
அதுவே ஆதியென்றால்
அதற்கு முன்??

அதற்கு முன்
இல்லையென்றால்
அதற்கு பின்??

வெற்றிடமே அதுவானால்
வெற்றிடமாய் அதுவாமோ???

வெற்றிடத்தில் நானும்
கரைந்து பின் ??

பூரணம் தான் வெற்றிடமோ
வெற்றிடம்தான் பூரணமோ??

கணிதங்கள் தோற்றுவிடும்
கற்பனைகள் பேதலிக்கும்
உணராத உணர்வதனை
உணர்வதுதான் எக்காலம்??

--- தனஞ்சயன்   

Friday, 21 July 2023

ஒரு துளி அண்டமாய் விரியும்

 புவனம் பெரிது

ககனம் பெரிது பெரிது

அண்டம் அதனில் பெரிது

ப்ரஹ்மம் அளவில் கூடா

 

எனினும் அதனில்

ஒரு துளி

அகம் எனும்   

அடங்காப் பேரொளி

 

ஒரு துளி

அண்டமாய் விரியும்

வழி நோக்கி

இரு விழிகள்….                    

Friday, 14 July 2023

வசந்தமினி வாராது

 ஆடி அமாவாசை

வாராது இனி மீண்டும் 

     வசந்தமினி வாராது 

தாய் வயிற்றில் மிதந்திருந்த 

     இதங்கள் இனி வாராது: 

வெயிலுக்கும் குளிருக்கும் 

     போர்வையின்றி சுகித்திருந்த… 

வாராது இனி மீண்டும் - அந்த  

     வசந்தமினி வாராது

 

பசுயுமில்லை ருசியுமில்லை, 

   தூக்கமில்லை விழிப்புமில்லை, 

உதிரத்தை பகிர்ந்தளித்த 

   பானைக்குள் கண்மூடி 

நித்திரையில் பத்திரமாய் 

   நீந்தி விளையாடிநின்ற….

வாராது இனி மீண்டும் - அந்த  

     வசந்தமினி வாராது 

 

கண்ணென்றும் மணியென்றும் 

    நாற்கரங்கள் சுமப்பதில்லை! 

ஓடினால் விழுவெனென்று       

   துரத்தும் விழி வாராது! 

முகம் வாட நீர்பெருக்கும் 

    சால்கள் எங்கு மறைந்ததுவே

வாராது இனி மீண்டும் - அந்த  

     வசந்தமினி வாராது

 

தோல்விபயம்  துளைத்தெடுக்க 

   தோள்கொடுத்து தாங்கி நின்ற, 

தோள்கள் இனி தாங்காது 

   மண்புதைந்து மாய்ந்ததுவே 

அன்னையும் தந்தையும் 

   மறைந்தபின் இவ்வுலகில் 

வாராது இனி மீண்டும் - அந்த  

     வசந்தமினி வாராது

Thursday, 13 July 2023

குறைதீர்க்கும் பாரிஜாதம்!

 மலருகின்ற மலருக்கு

    மணமெதுவும் தெரிவதில்லை.

தான் கொண்ட தேன் சுவையும்

    ஒரு கணமும் அறிந்ததில்லை.

மனமயக்கும்  நிறமழகும்

   மனதிலே இனித்ததில்லை.

காணுலகை வானுலகாய்

   மாற்றுகின்ற மாமலரே…

உன் சுகங்கள் உனக்கில்லை

   உலகிற்கே தந்தளித்தாய்!

 

வண்டு வரும், தேன் சுவைக்கும்

   வலி உனக்கு, தேன் எவர்க்கோ?

தென்றலது சுகந்தமாகும்..

  வழியெங்கும் மணம் பரப்பும் ..

முட்கூட்ட  பெரும் கடலில்

  முளைத்து நிற்கும் தேன்மலரே..

சுட்டெரிக்கும் பானுமுன்னே

  புன்னகைக்கும் மர்மம் என்ன!

உன் சுகங்கள் உனக்கில்லை

   உலகிற்கே தந்தளித்தாய்!

 

கானகத்து காரிருளில்

  கண் காண மலர்ந்துவிட்டு

ஊன் அடங்கி ஒடுங்கிவிடும்

  வீண் மலரும் நீயோஅல்ல.

ஊரெங்கும் ஒளிபரப்பி

  துயரறுக்கும் பேரொளியே

துயரெல்லாம் உனக்குள்ளே

  தெரியாமல் புதைத்துவிட்டாய்.

உன் சுகங்கள் உனக்கில்லை

   உலகிற்கே தந்தளித்தாய்!

 

உயிர் துறக்கும் வேளையிலும்

  ஈந்து நின்ற கர்ணனை போல்,

தன் உதிரம் தான் தந்து   

  மாயனையே ஏந்த வைத்தாய்.

கார்மேக வண்ணனவன்

  ஏழுலக குழல் மணக்கும்

குறையில்லா மகிழம்பூ .. நீ

  குறைதீர்க்கும் பாரிஜாதம்!

மறைந்தாலும் வாழ்ந்திருப்பாய்

    மாயனுடன் கலந்துவிட்டாய். 

 

                           ---- தனஞ்சயன்

Monday, 12 June 2023

தூக்கம்

 

தூக்கம்... அது ஒருவகை மயக்கம்  

கள்ளினும் இனியதாய் மெய்மறந்து கண்ணயரும்

தூக்கம்.... அது ஒரு வகை மயக்கம்: 

 

உறங்குவது போலும் சாக்காடு... இல்லை

 இவ்வுலகத் துன்பமெலாம்… மதி மறந்து

Baby Sleeping Newborn Sleep Cute - Free image on Pixabay - Pixabayதூக்கம்.. அது ஒரு இன்ப மயக்கம்!

 

வாழ்ந்திடா வாழ்க்கையெலாம்

வாழ்வதாய் கனவு கண்டு ……

தூக்கம்.... அது ஒரு போதை கிறக்கம்!

 

ஆழ்மனதின் உணர்வலைகள்

பகைவர்களைப் பந்தாடும்

தூக்கம்... அது ஒரு வெற்றிக் களிப்பாம்..   

 

உறங்கி விழிப்பது போலும் பிறப்பு..

 வேண்டேன் வள்ளுவரே. இன்ப 

மயக்கத்தில் தூங்குகிறேன்.. விழிக்க வேண்டாம்.

 

கவியரசே நன்றி பல……..

அவனை எழுப்பாதீர்

அப்படியே தூங்கட்டும்

ஆழ்ந்த துயிலினிலே

அமைதியினைக் காணட்டும்.