முதலில் நான் தமிழ் அறிஞன் அல்ல. Adv. Kanya Rajesh கேட்டதால் இந்தப் பதிலைத் தருகிறேன்.!!
வடமொழிச் சொற்களை தமிழில் பயன்படுத்தலாம். அதற்கு நன்னூல், இரண்டு முறைகளைக் கூறுகிறது.
‘தற்சமம் = வடமொழிச் சொற்களை அப்படியே எழுத
முடிபவை ……….. கமலம், கல்யாணம்’
‘தற்பவம்= தமிழுக்கு ஏற்றவாறு, மாற்றி எழுதுபவை…………. பங்கயம், வருடம் ‘
இதற்கு கிரந்த எழுத்துக்கள் தேவை இல்லை.
கிரந்த எழுத்துக்களின் ஒலி தமிழில் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது .
தொல்காப்பிய இலக்கணத்தின் அடிப்படையில்,
சொற்களின் இடையில் தோன்றும் வல்லின எழுத்துக்கு முன்னர் அவற்றின் இன-மெல்லின எழுத்து வந்தால், பொலி-ஒலி தோன்றும்!
தங்கம், ஊஞ்சல், பண்டம், பந்து, கம்பன், பகன்றான் என்ற சொற்களில், 'ங்க(Ga), ஞ்ச(Ja-ஜ), ண்ட(Da), ந்த(Dha), ம்ப(Ba), ன்ற(NDra)' இணைகள் எப்போதும் பொலி-ஒலிகளையேத் தருகிறது
'கரகங்கள்' என்ற சொல்லில், Ka - Ha - Ga என்ற மூன்று ஒலிகளும் ஒலிப்பதைக் காண்க.
ஆனால் எல்லாச் சொற்களையும் அப்படி தமிழில் எழுதிவிட முடியாது.
தமிழ் ஆங்கிலத்தைப் போல் அல்லாமல் ஒரு "Phonetic language".
அதாவது ஆங்கிலத்தில் பல எழுத்துக்கள் அடங்கியும், ஒடுங்கியும், சப்தம் மாறியும் வரும். ஆங்கிலத்தில் எழுத்துக்களை வரிசையாக அப்படியே வாசித்தால் வார்த்தை ஆகாது. எழுத்துக்களின் கூட்டை சரியாக உச்சரிக்க "phonetic script "
வேண்டும். தமிழில் அது கிடையாது. ஆகவே தமிழில் எங்கு எழுத்தின் உச்சரிப்பு மாறுபடுகிறது என்பதில் தடுமாற்றம் வரலாம்.
சிலநேரங்களில் எழுத்தை தமிழில் எழுதும் பொழுது பொருளும் மாறலாம். ஸ்ரீனிவாஸன் - ஸ்ரீ நிவாஸம், அதாவது லட்சுமி வசிக்கும் இடம்: சீனிவாசன் - எறும்பு . நான் ஸ்ரீனிவாஸனாகவே இருந்துவிட்டு போகிறேன்.
சங்கப் புலவர்கள் தொட்டு, வள்ளுவர், இளங்கோ, ஆழ்வார்கள், நாயன்மார்கள், கம்பன் யாருமே கிரந்தம் பயன்படுத்தவில்லை!. ஆனால், சோழ பல்லவ அரசர்கள் கிரந்தத்தில் கல்வெட்டுகள் எழுதி வைத்தனர். மொழி பயன்பாடு மாறிவந்ததின் மரபு பதிவுகள் அவை. அதையும் நாம் மாற்ற நினைக்க கூடாது.
வடமொழி எழுத்துக்களின் ஒலி வடிவத்திற்கு தமிழில் வடிவம் கொடுக்கப் பயன்பட்ட எழுத்துக்களே கிரந்த எழுத்துக்கள்.
ஸ்ரீ , ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ இவை தமிழ் எழுத்துக்களே. இந்த எழுத்துக்கள் வேறு மொழிகளில் இல்லை.
"வடசொல்" என்பதும் தமிழ்ச் செய்யுள் செய்யப் பயன்படும் ஒரு வகைச் சொல். இது தொல்காப்பியர் சொன்னது:
"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே"
அதாவது ... "இயற்சொல்" "திரிசொல்" "திசைச்சொல்" "வடசொல்" என்ற குறியீடு பெற்ற சொற்கள் எல்லாமே ... தமிழ்ச் செய்யுளை உருவாக்கும் சொற்கள்.
நான்குவிதச் சொற்களையும் விளக்கும் தொல்காப்பியர் வடசொல்லை பற்றி கூறுகிறார் …...
“வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.”
வடசொல் என்பது சமஸ்கிருதம் மட்டுமின்றி, பிராகிருதம் மற்றும் பாலி மொழிகளையும் குறிக்கும். எனவே தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே வடசொல் தமிழில் இடம் பெற்றிருந்தது தெளிவாகிறது.
வடசொல்லைத் தமிழில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்க “ஒரீஇ’என்ற சொல்லை தொல்காப்பியர் பயன்படுத்தியுள்ளார்.
இந்த சூத்திரத்திற்கு, “வடசொல்லைத் தமிழ்ச் செய்யுளுக்கு ஆக்கிக் கொள்ளும் போது வடவெழுத்துகளை நீக்கித் தமிழ் ஒலிக்கேற்ற எழுத்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது தொல்காப்பியர் வடசொல்லைத் தமிழ்ப் படுத்தக் கூறிய வழிமுறையாகும்.” என்ற விளக்கத்தையே தனித்தமிழர் ஏற்றுக்கொள்வர்.
‘ஒரீஇ’ என்ற சொல்லுக்கு “தவிர்த்து, நீக்கி’ என்று பொருள் கொண்டால், வட எழுத்தைத் தொல்காப்பியர் தவிர்க்கச் சொன்னார் என்று பொருளாகும். வட எழுத்தைத் தவிர்த்து விடுவதென்றால், அதன் ஒலியையும் சேர்த்துத் தானேத் தவிர்க்க வேண்டும். எனவே ‘ ஒரீஇ’ என்ற சொல்லின் மூலம் வடஎழுத்தையும், அதன் ஒலியையும் தொல்காப்பியர் தவிர்க்கச் சொல்லியுள்ளார் என்ற முடிவைப் பெறலாம்.
ஆனால் இது தவறான விளக்கம் என்போர் , வேறு காரணங்களை கூறுகின்றனர்…………………
“வடஎழுத்து ஒரீஇ’ என்று குறிப்பிட்ட தொல்காப்பியர், அடுத்து “எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.’ என்று தெளிவுபடுத்தியுள்ளார்.”ஒரீஇ’ என்பதன் மூலம் வடஎழுத்தை நீக்கிவிட்டால், பின் எந்த “எழுத்தொடு புணர்ந்த சொல்’ வடசொல் ஆகும்?
தமிழுக்கான வடஎழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களிலிருந்து மாறுபட்டவையாகும். இவ்வாறு மாறுபட்ட எழுத்துக்களை தமிழில் சேர்த்து பயன்படுத்தலே “ஒரீஇ’ நிகழ்வாகும். தேவைகளுக்கு ஏற்ப உலகில் உள்ள மொழிகளில் இருக்கும் சொற்களைத் தமிழில் பயன்படுத்துவதற்கான இலக்கணத்தை “ஒரீஇ’ மூலம் தொல்காப்பியர் வழங்கியுள்ளதாகவும் , “ஒரீஇ’ என்பதற்கு “தவிர்த்து, நீக்கி’ என்று பொருள் கொண்டு தமிழைத் “தூய்மைப்படுத்தும்’ முயற்சி தமிழுக்கு நிவர்த்தி செய்யமுடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் அவர்கள் கருத்தாகும்.
இருவேறு கருத்துக்கள் எழுவதும் இயற்கையே.
மொழி இடத்துக்கு இடம் மாறுபடும். குமரி தமிழும் சென்னை தமிழும் வேறு வேறு.
பண்டைய தமிழும் இன்றைய தமிழும் பல இடங்களில் சொல் மாறி உருமாறி பொருள்மாறி போயுள்ளன. நாற்றம் என்பது அன்றைய தமிழில் மணம் . நாறும் பூ நாதன் இறைவனின் பெயர். அன்றைய துர்நாற்றம் இன்றைய நாற்றம். இன்று நமக்கு அது மணமாக மாறி போனது.
கிரந்த எழுத்துக்கள் வேண்டுமென்போரை பகைத்தலும் தேவையில்லை, வேண்டாமென்பவரை பழித்தலும் தேவையில்லை.
இது வேண்டாத ஒரு மொழி போர்.
தீயை கொளுத்தியவன் அணைக்கமாட்டான். காரணம் அவனது நோக்கம் அழிப்பது.
நாம் ஆக்குபவர்கள். தீயை வளரவிடவேண்டாம் என்பதே என் கருத்து
‘கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும்,
வழங்கு இயல் மருங்கின் மருவொடு திரிநவும்,
விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின்,
வழங்கு இயல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல்,
நன் மதி நாட்டத்து!, என்மனார் புலவர்.’ ---------- தொல்காப்பியர்
பொருள்:
கிளந்த அல்ல – முன்னர் சொல்லாதன
செய்யுளுள் திரிநவும் – செய்யுளில் நடப்பனவும்
வழங்கியன் மருங்கின் – வழக்கத்தின் பாங்கில்
மருவொடு திரிநவும் – கலந்து நடப்பனவும்
விளம்பிய வியற்கையின் – கூறிய முறைமையின்
வேறு படத் தோன்றின் – வேறாகத் தோன்றினால்
வழங்கியன் மருங்கின் – வழக்கத்தின் பக்கம்
உணர்ந்தன ரொழுகல் – அறிந்தவர் ஏற்ப நடத்தல்
நன்மதி நாட்டத் – நல்ல பகுத்தறிவின் பாற்படும்
தென்மனார் புலவர் – என்று கூறுவர் புலவர்..
இலக்கணமல்ல , நடைமுறை வழக்கங்களே இறுதி என்பது தொல்காப்பியரின் தீர்ப்பு.