Saturday, 6 April 2024

விளையாட்டு பதுமையென்றா

 சுடுகின்ற நீருமே, மேனிதான் தாங்குமோ, 

    பதம் பார்த்து பேணினேனே

(தரை )

படுகின்ற பாதமும், நோகுமோ, சாகுமோ,

    அணி கொண்டு ஓம்பினேனே

காய்கின்ற சூரியன், கதிரதும் துளைக்குமே

    தணலிலே, குடையிலே, ஒதுங்கினேனே             

கருவிலே தோன்றிய நாள்முதல் ஒருகுறை 

    அறியொணா தாங்கினாரே  


மேனிக்கு நறுமணம், ஒப்பனை பூச்சுகள் 

    நிதம் ஒரு மாற்றம் உண்டே    

அறுசுவை உணவுதான், கசந்திட தோன்றுதாம்

    தினம் தினம் விருந்துதானே

பறப்பதும் பாய்வதும்  நித்திய வாழ்வதாய்     

   உலகெலாம் கண்ட   துண்டே 

எத்தனை எத்தனை இன்பங்கள் வைத்தனை

  உலகிலே மாதவனே.


பேழையில் வைத்து பூட்டிய செல்வம் 

   பூமியின் இருளுக்குள் மறைவதற்கோ 

பேணிய மேனியும் புழுக்களால் துளைத்திட 

  சல்லடை பூக்களாய் மாறுதற்கோ

குளிரதும் வெம்மையும் அகற்றிய மேனியும் 

  நெருப்பிலே எரிதழல் பொசுக்குதற்கோ

கோலமும் அழிந்து இருந்ததும் மறந்து 

  நீறதாய் கரைவதற்கோ 


ஈட்டிய செல்வமும், நாட்டிய புகழும்தான்

  கடைசியில் நிலைப்பதுண்டோ

காலங்கள் மாறிடின் மறைந்தவர் நினைவுகள் 

  எத்தனை காலம்தான் நினைந்திடுமோ 

எதுவும் சதமல்ல, வாழ்க்கை பயனல்ல 

   என்றுதான் கூறி நின்றால்

எதற்காய்  எனை படைத்தாய், ஈச, நின் 

  விளையாட்டு பதுமையென்றா ??? 

Monday, 1 April 2024

தனிமை - 2

 தனிமை


பிறக்கும் முன் கருவறையில் 

      கும்மிருட்டுத்  தனிமை! 

பிறந்தவுடன் கண் மூடி 

     நல்லுறக்கத் தனிமை! 

கூடிக்  களித்தாலும்   

    மகுடம் ஏற தனிமை!

தோற்று துவண்டு விட்டால் 

   நண்பரில்லை தனிமை...........  


மணநாள் கண்டாலும் 

    மன அறையில் தனிமை! 

உறவுகள் தொடர்ந்தாலும் 

    உள் மனதில் தனிமை!   

ஊர் புகழ வாழ்ந்தாலும் 

   புகழ் மலையில் தனிமை! 

பிறர் இகழ வாழ்ந்தாலோ 

   புற உலகில் தனிமை........ 


செல்வம் கொழித்தாலோ

   உற்றார் முன் தனிமை! 

வறுமை எனை வாட்ட 

   உலகிருந்தும் தனிமை! 

தனிமை தனிமை அது 

   வாழ்வில் ஒரு அங்கம் ..

எவ்வுயிர்க்கும் கூடவரும் 

  நிழலுருவாய் தனிமை. 


தனியாக பிறந்திருந்து 

   தனியாக வாழ்ந்து 

தனியாக நடையிழந்து 

   ஊரெங்கும் தேடி 

துணையாக ஒரு மனதை 

   காணாது வாடி 

தனியாக போகின்றேன் 

  பிணவறையை நாடி....


பிணமாக மாற 

  அட.... 

    'என்'னோடு உறவுகொண்ட

       உடம்பதுவும் இல்லை....      


உடம்பை விட்டு மீண்டும் 

   தனியாக போகின்றேன் 

      தனியான நெடும்பயணம்.... 


'நானு'ம் தனிமை 

   என் ஊனோ பாவம்.. 

      அசைவில்லா 

        கொடும் தனிமை!!!.