Thursday, 13 October 2022

அது வாழ்க்கையின் வசந்த காலம்!

 அது வாழ்க்கையின் வசந்த காலம்!


கிடைத்ததை கொண்டு, அது கிளிஞ்சல் என்றாலும்
படைத்தவன் அழித்த, பொக்கிஷம் என்று
கையிலும் பையிலும் பிரியா இணையென
வெய்யிலில் மகிழ்ந்து திளைத்ததும் உண்டு!

கூழுடன் அன்பும் அமிர்தமாய் உண்டு
நிறைகுடமென கும்பியும் நிறைந்து சரிந்து
நொடியினில் மயங்கி விடியலில் நிமிர்ந்து
ஓடிய பொழுதெலாம் விளையாடிய பொழுதே!

பாலர்க்கு கவலையில்லை, அன்னையும் அப்பனுண்டு:
மாதருக்கு கவலையில்லை, வருபவன் துணையுமுண்டு:
காளைக்கு கவலையில்லை சுற்றமும் நட்புமுண்டு :
ஓய்வினில் கவலையில்லை மகனுடன் மகளுமுண்டு:

அது வாழ்க்கையின் வசந்த காலம்
                               .. அது இறந்த காலம் !!!


இன்பத்தை துன்பமாய் தொலைத்து விட்டு
துன்பத்தில் தேடுகிறோம், தொலைந்த ஒன்றை...
துன்பத்தை முன்னிறுத்தி இன்பத்தை தேடுகிறோம்
இன்பத்தை முன்னிறுத்த துன்பம்தான் இறந்திடுமே!!

Friday, 16 September 2022

மனதை வருடிய தருணங்கள் --- 16 - 09 - 2022

 மனதை வருடிய தருணங்கள் --- 16 - 09 - 2022


இன்று எங்களது Vivek Institute - ம் , Hindhustan College Of Arts and Science , சென்னை-ம் இணைந்து நடத்திய WORKSHOP ON SEROLOGICAL  & DIAGNOSTICS TECHNIQUES இனிதே நடந்து முடிந்தது.


நிறைவு விழா முடிந்து அனைவரும் விடை பெறுகின்ற தருணம் மறக்க முடியாத ஒரு நிகழ்வு நடந்தது!!!! 


திடீரென அந்த கல்லூரியிலிருந்து வந்த ஒரு மாணவன்,  ஆசி வேண்டி, நெடுஞ்சாண்கிடையாக தரையில் விழுந்து வணங்கி எழுந்து நின்றான்.


திருமணத்தன்று மட்டுமே பெற்றோர் காலில் வேறு வழியில்லாமல் விழுந்து வணங்கும் குழந்தைகள்....


இறைவன் சந்நிதியில் கூட விழுந்து வணங்க மறுக்கும் மனது கொண்ட தலைமுறை...


பெரியோர்களை வணங்குவது கௌரவ குறைவு என கருதும் ஒரு காலகட்டத்தில்.. 


எங்கிருந்தோ வந்த ஒரு மாணவன்...


எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படி மரியாதையை செலுத்தியது...


கண்களில் கங்கை பெருகியது....


கடந்த 38 வருட கல்லூரி பாடம் நடத்திய அனுபவத்தில், இன்று ஆத்ம திருப்தி அடைந்தேன்.   


எதிர்கால சந்ததி மீது எனக்கு நம்பிக்கை பிறந்த நாள் இன்று...   

Monday, 5 September 2022

நானே சிவம்

 

पुण्यं पापं सौख्यं दु:खं मन्त्रो तीर्थं वेदो यज्ञः |

अहं भोजनं नैव भोज्यं भोक्ता चिदानन्द रूप: शिवोऽहं शिवोऽहम् ||

na punyam na papam na sokhyam na dukham na mantro na tirtham na vedo na yagyah |

aham bhojanam neva bhojyam na bhokta chidanand rupah shivoham shivoham

 

புண்ணியமும் நானில்லை , பாபமும் நானில்லை

துக்கமும் நானில்லை, இன்பமும் நானில்லை

மந்திரத்தில் நானில்லை, தீர்த்த யாத்திரையில் நானில்லை

வேதங்களும் நானில்லை, யக்ஜ்னங்களும் நானில்லை

உண்பதும் நானில்லை, உணவாவதும் நானில்லை

நான் பேரின்ப பெருநிலை

நானே சிவம்

நானே சிவம்

                                                             ----    ஆதிசங்கராச்சாரியார் அவர்கள் இயற்றிய நிர்வாண ஷடகம்

 

நாலுவேதம் ஒதுவீர் ஞானபாத அறிகிலீர்

பாலுள்நெய்கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்

ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே

காலன்என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே.

                                                    ---        சிவ வாக்கியர்

 

என்னுள்ளே உறைந்திருக்கும்

இணையில்லா ஈசனை

காணுகின்ற கண் கொண்டு

காண்பதுதான் எக்காலம்...

 

இப்பிறவி காண்பதற்கு கனவினுள்ளும் வழிகளில்லை

எப்பிறவி எடுத்து உன்னுள் மறைவதுவும் எக்காலம்???? 

 

  -   தனஞ்சயன்   

Sunday, 21 August 2022

மாற்றம் "ஏ"மாற்றம்

 அன்று 


காத்திருந்து காத்திருந்து 

என்றோ ஒருநாள் 

சித்ரா ஹோட்டலில் சாப்பிட்ட  

மசால் தோசை 

நாவினின்று மாற மறுத்தது. 


இன்று, 


தினம் தினம் 

சொல்லுமுன் ஓடி வரும் 

ஸ்விக்கியும் சோமடோவும்   

மணக்கிறது ...

ஆனால் ஏனோ 

நாவினில் ஏற மறுக்கிது.


அன்று 


தீப்பெட்டியில் செங்கல் செய்து

அழகழகாய் வீடு கட்டி 

அட்டையிலே துளையெடுத்து 

சுவரினிலே சினிமா காட்டி

வீட்டு படிக்கட்டில் அமர்ந்து  

ஓட விட்ட  பேருந்து

அழகாய் பயணித்தது... 


இன்று 


?????   


அன்று 


என்றோ ஒருநாள் 

இரவிலே

வருகின்ற பந்தத்தை வரவேற்று  

நிப்பாரம்  பார்த்து 

துள்ளி துள்ளி 

வைக்கோல் மெத்தையில் 

பயணித்த புரவி வண்டி 

இரவெல்லாம் சுகித்தது.


இன்று 


அலுங்காமல் குலுங்காமல் 

ஆறு கால் பாய்ச்சல் வண்டி 

குலுங்கவில்லை 

சுகமுமில்லை 


அன்று 


பள்ளி முதலிலே 

பழைய காகிதம் சேர்த்தெடுத்து

கோணி ஊசியால் கோர்த்துவிட்டு  

மார்பிள் பேப்பரும்

காலிகோ துணியுடன் பிணைத்துவிட்டு 

அச்சகம் சென்றதை சீராய் அறுத்து 

புதிய நோட்டென்று   

கொன்டுசென்ற, பழையது 

உவட்டாமல் இனித்தது 


இன்று 


காகித நோட்டும் மணக்கவில்லை

கணனி நோட்டும் இனிக்கவில்லை..


காரணம் ஒன்றுமில்லை        

நீளுகின்ற வயது 

உதிக்கின்ற காலையை

புதிதாய் 

பார்க்க 

மறுக்கிறதோ???

Tuesday, 17 May 2022

grantha letters in tamil

 

முதலில் நான் தமிழ் அறிஞன் அல்ல. Adv. Kanya  Rajesh  கேட்டதால் இந்தப் பதிலைத் தருகிறேன்.!!

 

வடமொழிச்  சொற்களை தமிழில் பயன்படுத்தலாம். அதற்கு நன்னூல், இரண்டு முறைகளைக்  கூறுகிறது.

 

தற்சமம் = வடமொழிச்  சொற்களை அப்படியே எழுத முடிபவை ………..  கமலம், கல்யாணம்

தற்பவம்= தமிழுக்கு ஏற்றவாறு, மாற்றி எழுதுபவை…………. பங்கயம், வருடம்

இதற்கு கிரந்த எழுத்துக்கள் தேவை இல்லை.

 

கிரந்த எழுத்துக்களின் ஒலி தமிழில் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது .

 

தொல்காப்பிய இலக்கணத்தின் அடிப்படையில்,

சொற்களின் இடையில் தோன்றும் வல்லின எழுத்துக்கு முன்னர் அவற்றின் இன-மெல்லின எழுத்து வந்தால், பொலி-ஒலி தோன்றும்!

தங்கம், ஊஞ்சல், பண்டம், பந்து, கம்பன், பகன்றான் என்ற சொற்களில், 'ங்க(Ga), ஞ்ச(Ja-), ண்ட(Da), ந்த(Dha), ம்ப(Ba), ன்ற(NDra)' இணைகள் எப்போதும் பொலி-ஒலிகளையேத் தருகிறது

'கரகங்கள்' என்ற சொல்லில், Ka - Ha - Ga என்ற மூன்று ஒலிகளும் ஒலிப்பதைக் காண்க.

ஆனால் எல்லாச் சொற்களையும் அப்படி தமிழில் எழுதிவிட முடியாது.

 

தமிழ் ஆங்கிலத்தைப் போல் அல்லாமல் ஒரு "Phonetic language".  அதாவது ஆங்கிலத்தில் பல எழுத்துக்கள் அடங்கியும், ஒடுங்கியும், சப்தம் மாறியும் வரும். ஆங்கிலத்தில் எழுத்துக்களை வரிசையாக அப்படியே வாசித்தால் வார்த்தை ஆகாது. எழுத்துக்களின் கூட்டை சரியாக உச்சரிக்க "phonetic  script " வேண்டும். தமிழில் அது கிடையாது. ஆகவே  தமிழில்  எங்கு எழுத்தின் உச்சரிப்பு மாறுபடுகிறது என்பதில் தடுமாற்றம் வரலாம்.

 

சிலநேரங்களில் எழுத்தை தமிழில் எழுதும் பொழுது பொருளும் மாறலாம். ஸ்ரீனிவாஸன் - ஸ்ரீ நிவாஸம், அதாவது லட்சுமி வசிக்கும் இடம்: சீனிவாசன் - எறும்பு . நான் ஸ்ரீனிவாஸனாகவே இருந்துவிட்டு போகிறேன்.

 

சங்கப் புலவர்கள் தொட்டு, வள்ளுவர், இளங்கோ, ஆழ்வார்கள், நாயன்மார்கள், கம்பன் யாருமே கிரந்தம் பயன்படுத்தவில்லை!. ஆனால், சோழ பல்லவ அரசர்கள் கிரந்தத்தில் கல்வெட்டுகள் எழுதி வைத்தனர். மொழி பயன்பாடு மாறிவந்ததின் மரபு பதிவுகள் அவை. அதையும் நாம்  மாற்ற நினைக்க கூடாது.

 

வடமொழி எழுத்துக்களின் ஒலி வடிவத்திற்கு தமிழில் வடிவம் கொடுக்கப் பயன்பட்ட எழுத்துக்களே கிரந்த எழுத்துக்கள்.

ஸ்ரீ , ,,,,க்ஷ இவை தமிழ் எழுத்துக்களே.  இந்த எழுத்துக்கள் வேறு மொழிகளில் இல்லை.

 

"வடசொல்" என்பதும் தமிழ்ச் செய்யுள் செய்யப் பயன்படும் ஒரு வகைச் சொல். இது தொல்காப்பியர் சொன்னது:

"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று

அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே"

அதாவது ... "இயற்சொல்" "திரிசொல்" "திசைச்சொல்" "வடசொல்" என்ற குறியீடு பெற்ற சொற்கள் எல்லாமே ... தமிழ்ச் செய்யுளை உருவாக்கும் சொற்கள்.

 

நான்குவிதச் சொற்களையும் விளக்கும் தொல்காப்பியர் வடசொல்லை பற்றி கூறுகிறார் …...

வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.”

வடசொல் என்பது சமஸ்கிருதம் மட்டுமின்றி, பிராகிருதம் மற்றும் பாலி மொழிகளையும் குறிக்கும். எனவே தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே வடசொல் தமிழில் இடம் பெற்றிருந்தது தெளிவாகிறது. 

வடசொல்லைத் தமிழில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்கஒரீஇஎன்ற சொல்லை தொல்காப்பியர் பயன்படுத்தியுள்ளார்.

 

இந்த சூத்திரத்திற்கு, “வடசொல்லைத் தமிழ்ச் செய்யுளுக்கு ஆக்கிக் கொள்ளும் போது வடவெழுத்துகளை நீக்கித் தமிழ் ஒலிக்கேற்ற எழுத்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது தொல்காப்பியர் வடசொல்லைத் தமிழ்ப் படுத்தக் கூறிய வழிமுறையாகும்.” என்ற விளக்கத்தையே தனித்தமிழர் ஏற்றுக்கொள்வர்.

ஒரீஇஎன்ற சொல்லுக்குதவிர்த்து, நீக்கிஎன்று பொருள் கொண்டால், வட எழுத்தைத் தொல்காப்பியர் தவிர்க்கச் சொன்னார் என்று பொருளாகும். வட எழுத்தைத் தவிர்த்து விடுவதென்றால், அதன் ஒலியையும் சேர்த்துத் தானேத் தவிர்க்க வேண்டும். எனவேஒரீஇஎன்ற  சொல்லின் மூலம் வடஎழுத்தையும், அதன் ஒலியையும் தொல்காப்பியர் தவிர்க்கச் சொல்லியுள்ளார் என்ற முடிவைப் பெறலாம்.

ஆனால் இது தவறான விளக்கம் என்போர் , வேறு காரணங்களை கூறுகின்றனர்…………………

வடஎழுத்து ஒரீஇஎன்று குறிப்பிட்ட தொல்காப்பியர், அடுத்துஎழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.’ என்று தெளிவுபடுத்தியுள்ளார்.”ஒரீஇஎன்பதன் மூலம் வடஎழுத்தை நீக்கிவிட்டால், பின் எந்தஎழுத்தொடு புணர்ந்த சொல்வடசொல் ஆகும்?

தமிழுக்கான வடஎழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களிலிருந்து மாறுபட்டவையாகும். இவ்வாறு மாறுபட்ட எழுத்துக்களை தமிழில் சேர்த்து பயன்படுத்தலேஒரீஇநிகழ்வாகும். தேவைகளுக்கு ஏற்ப உலகில் உள்ள மொழிகளில் இருக்கும் சொற்களைத் தமிழில் பயன்படுத்துவதற்கான இலக்கணத்தைஒரீஇமூலம் தொல்காப்பியர் வழங்கியுள்ளதாகவும்  , “ஒரீஇஎன்பதற்குதவிர்த்து, நீக்கிஎன்று பொருள் கொண்டு தமிழைத்தூய்மைப்படுத்தும்முயற்சி தமிழுக்கு நிவர்த்தி செய்யமுடியாத பாதிப்பை  ஏற்படுத்தும் என்பதும் அவர்கள்  கருத்தாகும்.

 

இருவேறு கருத்துக்கள் எழுவதும் இயற்கையே.

மொழி இடத்துக்கு இடம் மாறுபடும். குமரி தமிழும் சென்னை தமிழும் வேறு வேறு.

பண்டைய தமிழும் இன்றைய தமிழும் பல இடங்களில் சொல் மாறி உருமாறி பொருள்மாறி போயுள்ளன. நாற்றம் என்பது அன்றைய தமிழில் மணம் . நாறும் பூ நாதன் இறைவனின் பெயர். அன்றைய துர்நாற்றம் இன்றைய நாற்றம். இன்று நமக்கு அது மணமாக மாறி   போனது.

கிரந்த எழுத்துக்கள் வேண்டுமென்போரை பகைத்தலும் தேவையில்லை, வேண்டாமென்பவரை பழித்தலும் தேவையில்லை. 

 

இது வேண்டாத ஒரு மொழி போர்.

தீயை கொளுத்தியவன் அணைக்கமாட்டான். காரணம் அவனது நோக்கம் அழிப்பது.

நாம் ஆக்குபவர்கள். தீயை வளரவிடவேண்டாம் என்பதே என் கருத்து

 

கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும்,

வழங்கு இயல் மருங்கின் மருவொடு திரிநவும்,

விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின்,

வழங்கு இயல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல்,

நன் மதி நாட்டத்து!, என்மனார் புலவர்.’   ----------  தொல்காப்பியர்

 

பொருள்:

கிளந்த அல்லமுன்னர் சொல்லாதன

செய்யுளுள் திரிநவும்செய்யுளில் நடப்பனவும்

வழங்கியன் மருங்கின்வழக்கத்தின் பாங்கில்

மருவொடு திரிநவும்கலந்து நடப்பனவும்

விளம்பிய வியற்கையின்கூறிய முறைமையின்

வேறு படத் தோன்றின்வேறாகத் தோன்றினால்

வழங்கியன் மருங்கின்வழக்கத்தின் பக்கம்

உணர்ந்தன ரொழுகல்அறிந்தவர் ஏற்ப நடத்தல்

நன்மதி நாட்டத்நல்ல பகுத்தறிவின் பாற்படும்

தென்மனார் புலவர்என்று கூறுவர் புலவர்..

 

இலக்கணமல்ல , நடைமுறை  வழக்கங்களே இறுதி என்பது தொல்காப்பியரின் தீர்ப்பு.

 

Tuesday, 3 May 2022

கபாலிகன்

  ..........கபாலிகன்....



தந்த்ர சாஸ்த்திரங்களில் கை தேர்ந்தவன்.

அவனது ஆசை, இந்த உடலோடு மேலுலகம் செல்ல வேண்டும்.

உடலின் ஆசையும் தந்த்ர வித்தைகள் கொடுத்த ஆணவமும், அவனது கால முடிவிற்கு கொண்டு செல்கிறது என்பது, அவனிற்குப் புரியவில்லை.

ஒரு அரசனையோ அல்லது ஞானியையோ நரபலி கொடுத்தால் அந்த சித்தி அடையலாம் என்று அவனிற்குத் தோன்றியது.

அரசன் --- ஊஹூம் -- சற்று கடினம் ..

நமக்குத் தேவை அஹிம்சாவாதிகள்....

ஆதி சங்கரர் கருணையே வடிவானவர் .. அவரைப் பலிகொடுப்பதே எளிது... சாலச்சிறந்தது.

தீர்க்கமான முடிவோடு அந்த ஞானியை அடைந்தான், கபாலிகன் ….

சாத்தான் வேதம் ஓதியது...

“ஆதிசங்கரரே, எனக்கு ஒரு உதவி வேண்டும். நான் தங்களை நரபலி கொடுக்க வேண்டும்... நீங்கள் தான் முற்றும் துறந்தவர் ஆயிற்றே.... பிறருக்காகவே உயிர் வாழ்பவர் ஆயிற்றே... நீங்கள் மறுக்க மாட்டீர்கள்!

முன்பொருகாலத்தில் ததீசி முனிவர் தனது எலும்புகளை இந்திரனுக்கு கொடுத்தாரே.. அதேபோல் தங்கள் எனக்கு உங்கள் தலையைத் தர வேண்டும்..”

வெட்டிய மரம் கீழே விழுவதைப் போல் நெடுஞ்சாண் கிடையாக பாதத்தில் விழுந்தான்.
சங்கரர் சிரித்தார்... “நிச்சயமாகத் தருகிறேன்.... என்றோ அழியப்போகிற இந்த உடல் உனக்காக அழியட்டுமே.. அது புண்ணியம்தானே..

ஓன்று செய்...

நாளை என் சீடர்கள் பிக்ஷைக்குப் போகின்ற சமயத்து என்னிடம் வா. நான் தனியாக இருப்பேன் .. தலையை எடுத்துக்கொள் என்றார்.”

யார் மாளப்போகிறோம் என்பது தெரியாமலே, தனது ஆசைக்கு தீனி கிடைத்துவிட்ட மகிழ்வோடு சென்று மறுநாள் வந்தான் கபாலிகன்.

சங்கரர் கண்களை லேசாக திறந்தபடி நாசியை நோக்கி, ஐம்புலன்களையும், மனதில் உள்ளிழுத்து, மனதை ஆன்மாவில் நிலை நிறுத்தி, நேராக நிமிர்ந்து நிஷ்டையில் ஆழ்ந்து போனார்..

கபாலிகன் கொடுவாளோடு வேகமாக வந்தான்.. மகிழ்ந்தான்..

சங்கரரோ சுற்றம் மறந்து, பேரானந்தத்தில் அமிழ்ந்து போனார்..

வாளை ஓங்கினான்... கபாலிகன்…..


பத்மபாதர் ... சங்கரரின் பிரதம சீடன்... நரசிம்ம சித்தி பெற்றவன்.. அவனது ஆழ் மனதில் இது காட்சியாக தெரிந்தது .

அடுத்த நொடி கபாலிகன் முன் வெறிகொண்ட சிம்மமாக பத்மபாதர்..

பத்மபாதரின் நகங்கள் கபாலிகனின் மார்பை கிழித்தது.. நரசிம்ம மூர்த்தி ஆசியோடு கபாலிகன் செல்ல வேண்டிய இடம் சென்றான்.

பத்மபாதரின் சிம்மக் கர்ச்சனை கேட்டு சீடர்கள் ஓடிவந்தனர்..

சங்கரர் நிஷ்டையில் ... கபாலிகன் மேலே கொண்டுபோக நினைத்த பூத உடல், கீழே கிடந்தது,… பிணமாக..

சங்கரர் கண் விழித்தார்.. நடந்ததைப் புரிந்து கொண்டார்..

பத்மபாதர் தன் நிலை திரும்பவில்லை....

நரசிம்மரை சாந்தப்படுத்த ஆதி சங்கரர் ஒரு சுலோகம் பாடினார்

त्वमेव सर्गस्थितिहेतुरस्य त्वमेव नेता नृहरेऽखिलस्य |
त्वमेव चिन्त्यो हृदयेऽनवद्यें त्वामेव चिन्मात्रमहं प्रपद्ये ||

பத்மபாதர் மீண்டும் தன் நிலை திரும்பினார்

அநியாயக்காரர்களை அழிக்க, அவதாரங்கள் இனி ஆண்டவன் எடுப்பதில்லை ...

பத்மபாதர்கள் வருவார்கள்..