வீர சுதந்திரம் வேண்டி "
சுகத்தை எறிந்தவன்
உயிருடன் தோலுரித்தும்
மார்பை நிமிர்த்தியவன்
வாழ்வை தொலைத்தவன்
தன்னையே தந்தவன்.....
சுதந்திரம் காணாது
உரமாகிப்போனவர்கள்
சரித்திரத்திலும்
காணாது போய்விட்டனர் !
அந்த,
உரத்தில் விளைந்த
காளான்கள்
வனத்தை அழித்த
விஷ விருக்ஷம்
தெருவுக்கு தெருவாய்
மூலை முடுக்கிலெலாம்
சிலையாய்
பல்கலையாய்
மணியாய்
மண்டபமாய்
மக்கள் பணத்தில்
மாக்கள்
கை காட்டி நிற்கின்றனர்
பிஞ்சு செடிகளெல்லாம்
நஞ்சு விதையுண்டு
நஞ்சாய் மாறி இன்று
சரித்திரம் அறியாது
தரித்திரராய்
உலவுகின்றார்
எங்கள் தமிழ்நாட்டிலே......
கத்தியின்றி ரத்தமின்றி
பெற்றதல்ல சுதந்திரம்
தியாகிகள்
ரத்தத்தால்
காய்ந்த காவியே
எங்கள் மண் .
மார் துளைத்த
குண்டுகள்,
துளைக்கவில்லை
வீரத்தை
குத்தி நின்ற ஈட்டிகள்,
குத்தவில்லை
தியாகத்தை
பாரத தாய் தேர் இழுக்க
செக்கிழுத்த செம்மல்
முகம் அறிய
தியாகியர்தம்
தியாகத்தால்
மலர்ந்த பூமி
வெள்ளையன் இட்ட
பிச்சையல்ல
சுதந்திரம்
இது
ஆயிரம் ஆயிரம்
இன்னுயிர் ஈந்து
பறித்த
மணிமகுடம்.
எங்கள் தமிழ் மண்ணிலும்
வீரமும் தியாகமும்
அழிந்து விடாது
மாய வலையில்
சிக்கிய சிம்மம் நாம்
வலை அறுக்கும்
காலம் வரும்
அரக்கர்கள் காலம்,
சாஸ்வதம் அல்ல
பாரதி,
"கண்ணீரால் காத்த"
இப்பயிர்
"கருக திருவுளம்"
வருவதில்லை.
- தனஞ்சயன்