Saturday, 14 August 2021

காளமேகம்

  காளமேகம்


ஆசுகவி… அதாவது, சூல் கொண்ட மேகம் போல் நினைத்த நேரத்தில் கவிதை மழை பொழிபவன்.

பதினைந்தாம் நூற்றாண்டில் மதுரை அருகே திருமுகூரிலே பிறந்தவர். வரதன் அவர் இயற்பெயர்.

தஞ்சையை ஆண்ட சிற்றரசன் திருமலைராயன். தமிழில் தன்னை மறந்தவன்.

அறுபது நான்கு தமிழ் புலவர்களை தனக்கு நிகராக மரியாதை செய்து, சகல வசதிகளையும் செய்துகொடுத்தான். செல்வத்தினால் புலவர்களின் செருக்கும் உயர்ந்தது.

காணுங்கால் இந்த புலவர்களை கட்டியம் கூறி மரியாதையை செலுத்துவது வழக்கம். புலவர்களில் தலைமை புலவர் அதிமதுரகவி.

தமிழை போற்றும் மன்னனை காண என்று வந்த காளமேகத்திற்கு இந்த செருக்கு கசந்தது. புலவர்களை சற்றும் சட்டை செய்யாமல் நடந்தான். புலவர் கூட்டம் உடன் வந்த காவலர்கள் அதிமதுரகவிக்கு மரியாதை செய்ய வற்புறுத்தினர்.

பாய்ந்து வந்தது மேகத்திடமிருந்து மழை,

" அதிமதுரம் என்றே அகிலம் அறியத்
துதிமதுர மாயெடுத்துச் சொல்லும் - புதுமையென்ன
காட்டுச் சரக்குலகிற் காரமில்லாச் சரக்குக்
கூட்டுச் சரக்கதனைக் கூறு "

அதிமதுரம் காட்டில் கிடைக்கின்ற ஒரு மருந்து . இதை ஏன் பல்லக்கில் தூக்கி துதிபாடி வீதியுலா செல்ல வேண்டும் என்று ஏளனமாகக் கேட்டான் காளமேகம்.

அந்த புலவர்களை தெய்வங்களாக பார்த்த மன்னனுக்கோ அது பிடிக்கவில்லை. அரசவைக்கு அழைத்தான் . அமர ஆசனம் கொடுக்கவில்லை.

தனக்கு ஞானம் கொடுத்த கலைமகளை துதித்தான். அரசனுக்கு பக்கத்தில் மற்றொரு ஆசனம் வந்தது. அதில் கம்பீரமாய் அமர்ந்து கொண்டு தமிழ் மேகம் பாடியது.

" வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியாசனத்தில் அரசரோடென்னைச்
சரியாசனம் வைத்த தாய்."

காளமேகம் தொடர்ந்து அந்த புலவர்களை பார்த்துக் கேட்டான், " நீங்களெல்லாம் யார்"

"நாங்கள் கவிராஜர்கள் " ( கவி என்றால் இன்னொரு பொருள் குரங்கு )

அப்படியென்றால் ….

"வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு
காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்
கவிராயர் என்றிருந்தக்கால்."

மன்னனின் முகம் சினத்தால் சிவந்தது... " நீர் யார் " கோபக் கனல் தெறிக்க கேட்டான்..

“தூதஞ்சு நாளிகையில் ஆறுநாளிகைதனில்
சொற்சந்த மாலை சொல்லத்
துகளிலா வந்தாதி யேழுநாளிகை தனில்
தொகைபட விரித்து ரைக்கப்
பாதஞ்செய் மடல்கோவை பத்துநா ளிகைதனில்
பரணியொரு நாண்முழுவ தும்
பாரகா வியமெலா மோரிரு தினத்திலே
பகரக்கொ டிக்கட்டி னேன்
சீதஞ்செ யுந்திங்கண் மரபினான் நீடுபுகழ்
செய்யதிரு மலைரா யன்முன்
சீறுமா றென்றுமிகு தாறுமா றுகள்செய்
திருட்டுக் கவிப் புலவரைக்
காதங்கு அறுத்துச் சவுக்கிட்டு அடித்துக்
கதுப்பிற் புடைத்து வெற்றிக்
கல்லணையி னொடுகொடிய கடிவாள மிட்டேறு
கவிகாள மேகம் நானே.”

நமக்கு புரியாத மொழியிலே காளமேகம் பாடி விட்டான் தனது பெருமைகளை...

எந்தெந்த பாடல்களை எவ்வளவு நாழிகைக்குள் தன்னால் பாட முடியும் என பட்டியலிடுகிறான்

செங்கோல் ஆட்சி செயும் திருமலைராயன் முன் எப்படி இந்த செருக்குற்ற கவிகள் நரித்தனம் பண்ணுகிறார்கள் என்பதை தெளிவித்து அவர்கள் கொற்றம் அடக்க வந்த காளமேகம் நான் என பறையறிவிக்கின்றான்.

மன்னன் தனது புலவர்களை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் கவிதை போட்டி நடத்துகிறான். அதிலும் வென்ற போதும் காளமேகத்தை மதிக்க மன்னன் தயாரில்லை….

காளமேகம் மனம் நொடிந்து போகிறது ….

"கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர்
காளைகளாய் நின்று கதறுமூர் - நாளையே
விண்மாரி யற்று வெளுத்து மிகக் கறுத்து
மண்மாரி பெய்கவிந்த வான்."

கொலைகாரர்கள் ஊர், கோள் , வஞ்சகம் செய்வோர் ஊர், கட்டுப்பாடற்ற காளைகளை போல திரிவோர் ஊர் , இங்கு மண் மழை பெய்து மாரி பொய்க்கட்டும் என வசைமாரி பொழிந்தான்

செய்யாத செய்த திருமலைராயன்வரையில்
அய்யா வரனே அரைநொடியில் - வெய்யதழற்
கண்மாரி யான்மதனைக் கட்டழித்தாற் போற் தீயோர்
மண்மாரி யாலழிய வாட்டு

கவிஞனின் நெஞ்சிலிருந்து வந்த அக்னி அந்த நாட்டின் வளத்தை அழித்ததுதிருமலைராயன் பட்டினம் இன்று மண்மேடாக காட்சி தருகிறது

இறைவனுக்கு தமிழ் தெரியாதா?? சமஸ்கிருதம் தான் தெரியுமா என்று கேலி பேசும் இன்றைய 'தமிழ் அறிஞர்களுக்கு' காளமேகத்தின் இந்த தமிழ் புரியுமா???

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.

கூகை ஆந்தை. இரவில் ஆந்தையும் பகலில் காகமும் வென்று விடும். மன்னனும் (கோ) பகைவனை வெல்வதற்கு கொக்கை போல் காத்திருக்க வேண்டும். கால மில்லா காலத்தில் பகையை எதிர்த்தால் மன்னன் தன்னை காக்க முடியாது.

தமிழின் நுணுக்கங்களை சிலேடையாக வெளிப்படுத்தியவன் காளமேகம்...

கவியரசருக்கு பலநேரங்களில் கைகொடுத்தவன் காளமேகம்

Saturday, 5 June 2021

ததிபாண்டன்

 

ததிபாண்டன்


கண்ணன் சிறு குழந்தை…..
அன்றும் இன்றும் என்றும் அவன் நமக்குக் குழந்தையே.
என் கண்ணனை நான் கைகளில் தூக்கி விளையாடுவேன்:
அவனின் சேட்டைகள்… முகத்தில் கோபமும் உள்ளத்தில் உவகையுமாய் கண்ணாமூச்சி ஆட வைக்கிறது:
அடிக்கவும் செய்வேன், அவன் அழுவதை பார்த்து அணைக்கவும் செய்வேன்:
ஆகா என்ன ஆனந்தம்…. அந்த பிரபஞ்சத்தின் தலைவன் என் கைகளில்!!
அவன் என் அடிமை.
அது, அன்றும் இன்றும் என்றென்றும், அப்படித்தான்!!.


அன்று…..
கோகுலத்தில் குட்டி கண்ணன் வழக்கம் போல் வெண்ணைத் திருட , யசோதை, அதைக் கண்டு கண்ணனைத் துரத்த...
கையினில் தாம்புக்கயிறோடு யசோதை ...
உலகளந்த மாயன் சிறுகுழந்தையாய் முன் ஓட..
அவன் அருள் வேண்டி ஓடும் பக்தனாய் யசோதை பின்னோட...
தெருவெல்லாம் கழிநடனம் செய்தபடி ஓடுகிறான் என் குழந்தை..
உலகத்தைப் படைத்தவனே உலகத்தில் ஓடி ஒழிய இடம் தேடும் அதிசயம்!!


அவன் கண்ணில் விழுந்தது ததிபாண்டன் வீடு. அவனுக்கும் வீடு பேறு வேண்டுமல்லவா!.
ஓடி உட்புகுந்த கண்ணன், கண்ணில் பட்டது பெரிய காலி வெண்ணைப் பாண்டம்.
அணுவிற்குள் அணுவாகியவன் பாண்டத்தில் நுழைந்து ஒளிந்துக் கொள்கிறான்.
ததிபாண்டன் கண்டுகொண்டான் --- வந்தது யாரென்று கண்டுகொண்டான் !
திரும்பினால்...அங்கு, தாம்புக்கயிறோடு வருவது யார், ஓ ! யசோதை!!


தனக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டியவன் தன்னிடமே அடைக்கலமாக... ஆகா, என்ன பேறு பெற்றனன்!!
பானையின் மூடியினை எடுத்தான்.. பானையை மூடி அதன் மேல் அமர்ந்து கொண்டான்.
"கண்ணன் இங்கு வந்தனன்??" மேலும் கீழும் மூச்சிரைக்க யசோதை.
"இல்லையம்மா இங்கு அவன் வரவில்லை" ... அப்பாவியாகத் ததிபாண்டன்.
முதியவர் ததிபாண்டன் கூறுவது நம்பகமானதே என்று யசோதை திரும்பினாள், //இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் தேடி//


நேரம் ஆயிற்று ... யசோதை போயாயிற்று... தன்னை தன்னுள்ளே அடக்கிக் கொண்ட நீலவர்ணன் பானையின் மூடியை தள்ளிப் பார்த்தான்.
மாயன், பாவம் இப்பொழுது குழந்தையாயிற்றே... மூடி அசையவில்லை.
பானையை மூடியவன் அதன்மேல் அமர்ந்தே உள்ளான், அசையவில்லை... என்னசெய்வது.
''ததி, சற்று எழுவாயா? நான் வெளிவரவேண்டும்''
"எழுகிறேன் ஆனால் அதற்கு முன் எனக்கு ஒரு வாக்கு வேண்டும்" .. இப்பொழுது பிணையக் கைதி கண்ணனாயிற்றே...
"என்ன வேண்டும் கேள்"..
"எனக்கு சுவர்க்கம் வேண்டும்"
"என்ன ததி, நானோ சிறுபிள்ளை, நானெப்படி உனக்கு சுவர்க்கம் கொடுப்பது"
"கண்ணா விளையாடாதே, நீ யாரென்று நான் அறிவேன், நீ எனக்கு வாக்களித்தே தீரவேண்டும்."
பக்தனின் முன் பகவான் அடிமையல்லவா... "சரி, சரி, முதலில் என்னை விடுவி, பின்னர் பார்த்துக்கொள்ளலாம்"
"நீ கண்ணனல்ல, கள்ளன் என்பதை நானறிவேன்.. வரத்தை கொடுத்தாலே உனக்கு விடுதலை"
“சரி சரி ஒத்துக்கொள்கிறேன் திறந்து விடு”
"ஆனால் இன்னும் ஒரு நிபந்தனை, இந்த பானை என்னோடே வாழ்வது, உன்னையும் இப்பொழுது தீண்டிவிட்டது.. ஆகவே அதற்க்கும் சுவர்க்கம் வேண்டும்"
“என்ன ததி தாத்தா , எப்படி பானைக்கு???”
“என்ன கண்ணா, அதுவும் உன் படைப்புதானே. வேண்டும் என்றால் ஒத்துக்கொள்.. இல்லை நான் இப்படியே அமர்ந்துகொள்கிறேன்”


தொண்டர்களுக்கு அடிமை அல்லவா இறைவன்.. அடிமைக்கு ஏது தனிசிந்தனை. தொண்டனின் சிந்தனையே இறைவனின் சிந்தனை.. //இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்//
"தந்தேன் சுவர்க்கம் உனக்கும், உன் பானைக்கும்"


பானைக்கே சுவர்க்கமென்றால் நமக்கில்லையா……………..
வாருங்கள் நாமும் சுவர்க்கம் செல்வோம்.. ததி பாண்டனையும் அவன் பானையையும் அங்கு பார்க்கலாம்.

Thursday, 3 June 2021

அநாயாசேன மரணம் 2

"அநாயாசேன மரணம்
விநா தைன்யேன ஜீவனம்
தேஹிமே க்ருபையா சம்போ
த்வயி பக்திம் அசஞ்சலாம்"

              .....................

நம்முள் நாமே உணராததை

அதன் பொருள் ஏதென்று தெரியாததை 

என்று வருமென்று புரியாததை 

நினைத்திட பயம் வரல் இயற்கையன்றோ!!


உடைவதற்காய் நீர்க்குமிழி பறப்பதில்லை

உடைந்து பின் மீண்டும் அது சேர்வதில்லை 

ஆயினும் அது நிலைத்து நிற்கும் 

ஐந்தில் ஓன்று பூதத்தோடு சேர்ந்து நிற்கும்.  


காலமது முடிந்துவிட்டால் காலன் தானே 

கோலங்கள் அழித்து இமை குவியும் 

வாவென்று சொன்னாலும் வருவதில்லை 

போவென்று மறுத்தாலும் விடுவதில்லை 


தெரியாத நிலை எண்ணி பயம் எதற்கு 

உயிர் பிரியும் நாளொன்று உண்மைதானே 

முடியாத கருமம் எண்ணி கலங்கலென்ன 

நொடியில் ஒரு மரணம் இனி வேண்டுவேனே.....

Saturday, 29 May 2021

ஏனிந்த கொடுமை இறைவா....

 ஏனிந்த கொடுமை இறைவா....

வீதி எங்கும் ஓலங்கள்
நாடு எங்கும் சிதைமலைகள்
வாழ்வினிலே கண்டிராத
பிரளயத்தின் பெரும்கூத்து
இயற்கை அன்னை நர்த்தனமே
இதுவரைக்கும் கண்டிருந்தோம்
பேரழிவு பொழிந்துநின்ற
அணு அதையும் கேட்டிருந்தோம்
உரு தெரியா உயிரதாலே
ஏனிந்த கொடுமை இறைவா....
ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய்
சுற்றமும் நட்பிழக்க
வீடெல்லாம் (சுடு) காடுகளாய்
மாறியது தாங்கிடவோ
எம் தவறோ உன் தவறோ
இழந்துவிட்டோம் நல்மணிகள்
உன் கருணை விழிகளினால்
எம் கவலை தீர்ப்பாயா??
பிள்ளைகள் நாம் கலங்குகிறோம்
அணைத்துவிடு பெருநெருப்பை
பூமிதனில் எரிவதினி
உன் திருவிளக்காய் இருக்கட்டும்……..
……. தனஞ்சயன்

Friday, 28 May 2021

முகுந்த மாலா ஸ்தோத்திரம்

 

முகுந்த மாலா ஸ்தோத்திரம் - குலசேகர ஆழ்வார்   ----    அதிலிருந்து சில   

 

mukunda mūrdhnā praṇipatya yāce

bhavantam ekāntam iyantam artham

avismṛtis tvac-caraṇāravinde

bhave bhave me ’stu bhavat-prasādāt

 

முகுந்தா உனக்கொரு வேண்டல்

என்றென்று எங்கெங்கு எவ்வகை பிறக்கினும்

நின் முகிழ் தாமரை பாதங்கள்

நினைத்திட அருளினை நல்குவை நல்குவை

 

 

nāhaṁ vande tava caraṇayor dvandvam advandva-hetoḥ

kumbhīpākaṁ gurum api hare nārakaṁ nāpanetum

ramyā-rāmā-mṛdu-tanu-latā nandane nāpi rantuṁ

bhāve bhāve hṛdaya-bhavane bhāvayeyaṁ bhavantam

 

நரகத்தில் உழலலோ போகத்தில் மருளலோ                  

எதனினும் எனக்கொன்றும் இல்லை

சொர்க்கமும் வேண்டேன் முகுந்தா முகுந்தா

உன் மலரடி மட்டுமே நெஞ்சத்துள் தாராய்.. 

 

 

nāsthā dharme na vasu-nicaye naiva kāmopabhoge

yad bhāvyaṁ tad bhavatu bhagavan pūrva-karmānurūpam

etat prārthyaṁ mama bahu mataṁ janma-janmāntare ’pi

tvat-pādāmbhoruha-yuga-gatā niścalā bhaktir astu

 

செல்வமும் வேண்டேன் இச்சையும் வேண்டேன்

கர்ம வினைப்பயன் காண்பேன்

நின் பாதகமலத்தின் சேவை ஒன்றையே

நெஞ்சத்தில் நின்றிட செய்வாய்

 

 

divi vā bhuvi vā mamāstu vāso

narake vā narakāntaka prakāmam

avadhīrita-śāradāravindau

caraṇau te maraṇe ’pi cintayāmi

 

நரகனை வதைத்த நல் தேவா                  (எனக்கு)

சொர்கமோ நரகமோ உன்மனம் கண்ணா

என் ஊன் விட்டு உயிர்  பொகும்பொது

உன்னிரு பாதங்கள் மனதிலே வேண்டும்

 

 

krishna tvadiya-pada-pankaja-panjarantam

adyaiva me vishatu manasa-raja-hamsah

prana-prayana-samaye kapha-vata-pittaih

kanthavarodhana-vidhau smaranam kutas te

 

காலதேவன் வந்தெனைக் கூப்பிடும்போது

நெஞ்சு அடைக்க நாவும் மயங்க

சிந்தை கலங்கிடும் போது

உன் பாதங்கள் எண்ணுவனோ அறியேனே

 

(இன்று )

சிந்தை தெளிந்து நெஞ்சம் மகிழ்ந்து      (உன்)

பாதங்கள் தொழுகின்ற போதே             (உன்)

மலர்பாதங்களிடை தஞ்சம் புகுந்திடும்

அன்னமாய் மாறிட வேண்டும்....

 

 

(உன் பாத)

மொட்டு விரி பட்டு பதுமத்தின் ஊடே

என் உள்ளுறை ஜீவன் கிடந்து 

உன்முகம் நோக்கி உன்னில் நான் மாய

நல்லருள் தந்திடல் வேண்டும்... 

 

                            ----- தமிழில் தனஞ்சயன்