மலருகின்ற மலருக்கு
மணமெதுவும் தெரிவதில்லை.
தான் கொண்ட தேன் சுவையும்
ஒரு கணமும் அறிந்ததில்லை.
மனமயக்கும்
நிறமழகும்
மனதிலே இனித்ததில்லை.
காணுலகை வானுலகாய்
மாற்றுகின்ற மாமலரே…
உன் சுகங்கள் உனக்கில்லை
உலகிற்கே தந்தளித்தாய்!
வண்டு வரும், தேன் சுவைக்கும்
வலி உனக்கு, தேன் எவர்க்கோ?
தென்றலது சுகந்தமாகும்..
வழியெங்கும் மணம் பரப்பும் ..
முட்கூட்ட
பெரும் கடலில்
முளைத்து நிற்கும் தேன்மலரே..
சுட்டெரிக்கும் பானுமுன்னே
புன்னகைக்கும் மர்மம் என்ன!
உன் சுகங்கள் உனக்கில்லை
உலகிற்கே தந்தளித்தாய்!
கானகத்து காரிருளில்
கண் காண மலர்ந்துவிட்டு
ஊன் அடங்கி ஒடுங்கிவிடும்
வீண் மலரும் நீயோஅல்ல.
ஊரெங்கும் ஒளிபரப்பி
துயரறுக்கும் பேரொளியே
துயரெல்லாம் உனக்குள்ளே
தெரியாமல் புதைத்துவிட்டாய்.
உன் சுகங்கள் உனக்கில்லை
உலகிற்கே தந்தளித்தாய்!
உயிர் துறக்கும் வேளையிலும்
ஈந்து நின்ற கர்ணனை போல்,
தன் உதிரம் தான் தந்து
மாயனையே ஏந்த வைத்தாய்.
கார்மேக வண்ணனவன்
ஏழுலக குழல் மணக்கும்
குறையில்லா மகிழம்பூ .. நீ
குறைதீர்க்கும் பாரிஜாதம்!
மறைந்தாலும் வாழ்ந்திருப்பாய்
மாயனுடன்
கலந்துவிட்டாய்.
---- தனஞ்சயன்
No comments:
Post a Comment