மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே.
-- சிலப்பதிகாரம்
பிறந்தது சிறையில்:
இரவு கழிந்தது மழையில்:
வளர்ந்தது மறைவில்:
வாழ்ந்தது இடையில்:
பட்டது கம்சனிடம்
வகை வகையாய்..
சிறுமேகத் துன்பம் போய்
பெருமேகம் சூழ்ந்துவிடும்
விட்டது பூதமென்றால்
வந்தது சடகம்
காகம் போன பின்பு
ஆகம் வந்ததென்ன...
புயலில் பஞ்சினைப் போல்
மேகம் கலைந்து நிற்க
அறியாப்பிள்ளையென
தெரியா நின்றதென்ன!!!
நண்பருக்காய் தூது போனாய்
தருமத்தின் மறுவடிவாய்……
துரியனெனும் மடமதியோன்
வாயிலுக்கு அடிமைபோன்றே!
அன்பருக்கு இன்பமாக, தருமத்தை காத்து நிற்க,
தனை மறைத்து, வில்லாளன் முன்னிறுத்தி
பகை முடித்து, வேடுவன் அம்பால் தனை முடித்த,
கார்முகில் மேனியனே, நகை தவழும் இதழினனே
கூடு விட்டு பாய்ந்துசெலும் வேளையிலே
வேண்டுவனோ!! யானறியேன் !
தூதர் எமை சூழ்ந்திருக்க
நாவெழுமோ நானறியேன்!
நரைமுடிந்து கூன் விழுந்து
கண் மறைத்து மதிமயங்க
கரைகாணாப் பெருவழியே...
நினைத்திடவும் மதியுண்டோ ?
யானறியேன்!
இன்றே சொல்லிவிட்டேன் …
நன்றே சொல்லிவிட்டேன் …
கண்ணா, கோவிந்தா, நாராயணா, கேசவா, மாதவா ….
நாவினிக்க சொல்லிவிட்டேன்...மறுபிறவி மாய்த்தொழிப்பாய்.
No comments:
Post a Comment