Tuesday, 3 May 2022

கபாலிகன்

  ..........கபாலிகன்....



தந்த்ர சாஸ்த்திரங்களில் கை தேர்ந்தவன்.

அவனது ஆசை, இந்த உடலோடு மேலுலகம் செல்ல வேண்டும்.

உடலின் ஆசையும் தந்த்ர வித்தைகள் கொடுத்த ஆணவமும், அவனது கால முடிவிற்கு கொண்டு செல்கிறது என்பது, அவனிற்குப் புரியவில்லை.

ஒரு அரசனையோ அல்லது ஞானியையோ நரபலி கொடுத்தால் அந்த சித்தி அடையலாம் என்று அவனிற்குத் தோன்றியது.

அரசன் --- ஊஹூம் -- சற்று கடினம் ..

நமக்குத் தேவை அஹிம்சாவாதிகள்....

ஆதி சங்கரர் கருணையே வடிவானவர் .. அவரைப் பலிகொடுப்பதே எளிது... சாலச்சிறந்தது.

தீர்க்கமான முடிவோடு அந்த ஞானியை அடைந்தான், கபாலிகன் ….

சாத்தான் வேதம் ஓதியது...

“ஆதிசங்கரரே, எனக்கு ஒரு உதவி வேண்டும். நான் தங்களை நரபலி கொடுக்க வேண்டும்... நீங்கள் தான் முற்றும் துறந்தவர் ஆயிற்றே.... பிறருக்காகவே உயிர் வாழ்பவர் ஆயிற்றே... நீங்கள் மறுக்க மாட்டீர்கள்!

முன்பொருகாலத்தில் ததீசி முனிவர் தனது எலும்புகளை இந்திரனுக்கு கொடுத்தாரே.. அதேபோல் தங்கள் எனக்கு உங்கள் தலையைத் தர வேண்டும்..”

வெட்டிய மரம் கீழே விழுவதைப் போல் நெடுஞ்சாண் கிடையாக பாதத்தில் விழுந்தான்.
சங்கரர் சிரித்தார்... “நிச்சயமாகத் தருகிறேன்.... என்றோ அழியப்போகிற இந்த உடல் உனக்காக அழியட்டுமே.. அது புண்ணியம்தானே..

ஓன்று செய்...

நாளை என் சீடர்கள் பிக்ஷைக்குப் போகின்ற சமயத்து என்னிடம் வா. நான் தனியாக இருப்பேன் .. தலையை எடுத்துக்கொள் என்றார்.”

யார் மாளப்போகிறோம் என்பது தெரியாமலே, தனது ஆசைக்கு தீனி கிடைத்துவிட்ட மகிழ்வோடு சென்று மறுநாள் வந்தான் கபாலிகன்.

சங்கரர் கண்களை லேசாக திறந்தபடி நாசியை நோக்கி, ஐம்புலன்களையும், மனதில் உள்ளிழுத்து, மனதை ஆன்மாவில் நிலை நிறுத்தி, நேராக நிமிர்ந்து நிஷ்டையில் ஆழ்ந்து போனார்..

கபாலிகன் கொடுவாளோடு வேகமாக வந்தான்.. மகிழ்ந்தான்..

சங்கரரோ சுற்றம் மறந்து, பேரானந்தத்தில் அமிழ்ந்து போனார்..

வாளை ஓங்கினான்... கபாலிகன்…..


பத்மபாதர் ... சங்கரரின் பிரதம சீடன்... நரசிம்ம சித்தி பெற்றவன்.. அவனது ஆழ் மனதில் இது காட்சியாக தெரிந்தது .

அடுத்த நொடி கபாலிகன் முன் வெறிகொண்ட சிம்மமாக பத்மபாதர்..

பத்மபாதரின் நகங்கள் கபாலிகனின் மார்பை கிழித்தது.. நரசிம்ம மூர்த்தி ஆசியோடு கபாலிகன் செல்ல வேண்டிய இடம் சென்றான்.

பத்மபாதரின் சிம்மக் கர்ச்சனை கேட்டு சீடர்கள் ஓடிவந்தனர்..

சங்கரர் நிஷ்டையில் ... கபாலிகன் மேலே கொண்டுபோக நினைத்த பூத உடல், கீழே கிடந்தது,… பிணமாக..

சங்கரர் கண் விழித்தார்.. நடந்ததைப் புரிந்து கொண்டார்..

பத்மபாதர் தன் நிலை திரும்பவில்லை....

நரசிம்மரை சாந்தப்படுத்த ஆதி சங்கரர் ஒரு சுலோகம் பாடினார்

त्वमेव सर्गस्थितिहेतुरस्य त्वमेव नेता नृहरेऽखिलस्य |
त्वमेव चिन्त्यो हृदयेऽनवद्यें त्वामेव चिन्मात्रमहं प्रपद्ये ||

பத்மபாதர் மீண்டும் தன் நிலை திரும்பினார்

அநியாயக்காரர்களை அழிக்க, அவதாரங்கள் இனி ஆண்டவன் எடுப்பதில்லை ...

பத்மபாதர்கள் வருவார்கள்..

No comments:

Post a Comment