Tuesday, 11 February 2025

ஓடுகிறேன்……… ஓடுகிறேன்

 

              ஓடுகிறேன்……… ஓடுகிறேன்

 

ஓடுகிறேன் ஓடுகிறேன் ,

திரும்பாமல் ஓடுகிறேன்.

கால்கள் நிற்க மறுப்பதால்..

முன்செல்பவர் தாண்டி ஓடுகிறேன்.

 

ஏன் முந்தினேன் அவர்களை?

யார் அவர்கள் ?, தெரியவில்லை!

வேகமாக, வேகமாக மட்டுமே..

ஓடுதற்காய் ஓடுகிறேன்.

 

கண் இமைக்காமல் ஓடுகிறேன்,

வானுயர்ந்த மலையும்,

புவி படர்ந்த குளமும் தெரியவில்லை.

செவிப்பறைகள் கிழித்துச் செல்லும்,   

குயிலோசை கேட்கவில்லை .

 

கண்கள் இமை சொருகி,

கால்கள் நடையிழந்து,

பேயன் மனம் பேதலித்து,

குற்றுயிர் ஆகும்வரை ,

நின்றால் வீழ்வேனென்றோ 

நிற்காது ஓடுகிறேன்…  

 

எதை நோக்கி ஓடுகிறேன்??

பார்த்தனின் குறிபோல…

கண்குருடாய் ஓடுகிறேன்….

ஆனால், குறியும் தெரியவில்லை...

 

பார்த்தனின் சாரதியே…

குறியில்லா ஒடடத்தின்

குறியாக நீயிருந்து

இறந்து பிறக்கச் செய்...

 

இது ஒன்றும்…

உனக்கு என்

வேண்டுதலல்ல !!

கட்டளை .

 

                     …..தனஞ்சயன்

No comments:

Post a Comment